ஒடிசா கோர ரயில் விபத்துக்கு காரணம் என்ன? சிக்னல் பிரச்சனையா? எழும் கேள்விகள்! தீவிரமாகும் விசாரணை
சென்னை: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 280 பேர் இறந்துள்ள நிலையில் விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் தான் கோர விபத்தின் பின்னணியில் சிக்னல் பிரச்சனை இருந்ததா? என்ற கேள்விகளை எதிர்க்கட்சியினர் எழுப்பி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம்புரண்டது. அதன்பிறகு அந்த வழியாக வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. இந்தியாவில் ரயில்கள் அவ்வப்போது தடம் புரளும் நிலையில் 3 ரயில்கள் அடுத்தடுத்து இப்படி விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உள்பட 280 பேர் வரை பலியாகி உள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டை சேர்ந்தோர் உள்பட 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்களை சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் மற்றும் விமானத்தில் அவர்களை அழைத்து வந்து சென்னையில் வைத்து சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் தான் விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது. இந்நிலையில் சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது ரயில்கள் இயங்கும் பாதையில் சிக்னல்கள் இருக்கும். இந்த சிக்னல்கள் சரியாக செயல்படாத நிலையில் விபத்து நடந்து இருக்கலாம் என இணையதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே தான் இந்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளும் முன்வைத்துள்ளன. இதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கேகலே, ‛‛ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் & யஷ்வந்த்பூர்-ஹவுரா ரயில் விபத்தின் துயர செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிக்னல் கோளாறு காரணமாக 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது என்ற குற்றச்சாட்டு நம்பமுடியாத வகையில் அதிர்ச்சியாக உள்ளது. இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் சிபிஐ(எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவும் இதே கேள்வியை எழுப்பினார். இதுபற்றி அவர், ‛‛இந்திய ரயில்வேயில் சிக்னல் மற்றும் பாதுகாப்பு அமைப்பு எதுவும் இல்லையா? அல்லது இதுபோன்ற பயங்கரமான துயரங்கள் இந்தியாவில் ரயில் பயணத்தில் இயல்பானதாக மாறுமா? இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கும் நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்'' என கூறியுள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலகி வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி பினோய் விஸ்வாம், ‛‛மத்திய அரசு சொகுசு ரயில்கள் மீது கவனம் செலுத்துகிறது. சாதாரண மக்கள் பயணிக்கும் ரயில்கள் மற்றும் தண்டவாளங்களில் அலட்சியம் காட்டுகிறது. இதற்கு ஒடிசா நிகழ்வு ஒரு சாட்சி. இதனால் மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications