தயாநிதி மாறனை கைது செய்து 'கஸ்டடி'யில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ முன்வைக்கும் 2 காரணங்கள்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீன் ரத்தாகுமா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வரும் திங்கள்கிழமையன்று தீர்ப்பளிக்க உள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, 323 பிராட்பேண்ட் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் டி.வி.க்கு வழங்கியதாக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Order on Dayanidhi's CBI Custody on Monday

இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன், பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளராக இருந்த எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இந்த மூவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

இதனிடையே இந்த வழக்கில் தயாநிதி மாறனை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது. இதனால் தம்மை கைது செய்யாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் 6 வார காலத்துக்கு இடைக்கால முன் ஜாமீன் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் விசாரணைக்கு தயாநிதி மாறன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை; அதனால் அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்தது.

தயாநிதி தரப்பு வாதம்

கடந்த இரு வாரங்களாக இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது தயாநிதி மாறன் மற்றும் சி.பி.ஐ. தரப்பு வைத்த வாதங்கள் விவரம்:

தயாநிதி மாறனின் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் முன்வைத்த வாதம்:

தயாநிதிமாறனை பழிவாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வேண்டுமென்று தவறான வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தயாநிதிமாறன் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு தயாநிதிமாறன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது. அதன் பின்னர் டெல்லி சென்று சி.பி.ஐ. முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார்.

சி.பி.ஐ. கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தயாநிதிமாறன் பதில் அளித்தார். ஏற்கனவே 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு அழைத்த போது நேரில் ஆஜராகி, சி.பி.ஐ. கேட்ட 75 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதே கேள்விகளை முதல்நாள் ஆஜராகும்போது சி.பி.ஐ. அவரிடம் கொடுத்தது. அதற்கு தயாநிதிமாறன் பதில் அளித்துவிட்டார்.

2ம் நாளும் காலை முதல் மாலை வரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அதிகாரிகள் கேட்ட சில கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளித்துவிட்டார். 3வது நாளும் காலை முதல் மாலை வரை தயாநிதிமாறனை உட்கார வைத்து சில கேள்விகள் கேட்டனர். அனைத்துக்கும் அவர் பதில் அளித்துவிட்டார்.

இறுதிநாள் அன்று சிபிஐ அதிகாரிகளிடம் தயாநிதிமாறனே கேட்ட போது இனிமேல் தேவையில்லை. விசாரணை முடிந்துவிட்டது என்று கூறினர். சி.பி.ஐ. விசாரணைக்கு முழுவதும் ஒத்துழைப்பை தயாநிதிமாறன் கொடுத்தார். ஆனால், அவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவரது இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இது உள்நோக்கம் உடையது. முன் ஜாமீனை ரத்து செய்வதற்கு எந்த காரணம் இல்லை.

இந்த வழக்கில் அனைத்து விவரங்களையும் சி.பி.ஐ.யிடம் நேரில் ஆஜராகி தயாநிதிமாறன் விளக்கம் அளித்துவிட்டார். எனவே அவருக்கு முன் ஜாமீன் தர வேண்டும். சிபிஐ மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். 300 இணைப்புகளை தயாநிதிமாறன் பெற்றுள்ளார் என்ற சி.பி.ஐ. குற்றச்சாட்டு முழுவதும் பொய்யானது. மத்திய அமைச்சர் என்ற முறையில் எத்தனை இணைப்புகளை வைத்து கொள்ளலாம் என்ற விதி உள்ளது. அப்படி இருக்கும் போது இவர் மீது கூறிய குற்றச்சாட்டு பொய்யானது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் கடந்த 2007ம் ஆண்டு வரை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்தார். அதன்பிறகு 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013ல் தயாநிதிமாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2014ம் ஆண்டு சம்மன் கொடுத்து அழைத்தனர். அப்போது தயாநிதிமாறன் விளக்கம் அளித்துவிட்டார்.

அதன்பிறகு தற்போது சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதுவும் 8 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணையை துரிதப்படுத்துகிறார்கள். முதலில் ரூ.440 கோடி முறைகேடு என்றார்கள். அதன் பின்னர் ரூ.150 கோடி என்றார்கள்.

இப்போது எப்.ஐ.ஆரில் ரூ.1 கோடியே 20 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதில் இருந்து சி.பி.ஐ. பொய்யான புகாரைப் பதிவு செய்துள்ளது என்பதும் அதன் உள்நோக்கமும் தெளிவாக தெரிகிறது. அதுவும் குறிப்பாக எஃப்.எம்.வானொலிகளுக்கான ஏலத்தில் சன் டிவி குழுமம் பங்கேற்க தடை விதித்து, சன் குழுமத்துக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோருவது உள்நோக்கம் கொண்டதாகும்.

மேலும் தொலைபேசி இணைப்புகள் மூலமாக வீடியோ டேட்டாக்களை பரிமாற்றம் செய்துள்ளதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. தொலைபேசி இணைப்புகள் மூலம் சினிமாக்களை எப்படி ஒளிபரப்ப முடியும்?

இவ்வாறு பி.எஸ். ராமன் வாதாடினார்.

இதேபோல் தயாநிதி சார்பாக ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தயாநிதிமாறன் மீது வேண்டுமென்று பொய் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் மீது 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு பதிவு செய்துவிட்டு அதன் பின்னர் அதற்கான ஆதாரத்தை திட்ட முயல்கிறார்கள்.

ஆனால் அவர்களிடம் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அனைத்து புகார்களுக்கும் சரியாக பதில் அளித்து உள்ளார். சன் டிவிக்கு எப்படி டெலிபோன் இணைப்புகளை பயன்படுத்த முடியும். ஒளிபரப்புக்கு இதை எப்படி பயன்படுத்த முடியும். சன்.டிவிக்கு தவறாக இணைப்புகளை பெற வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிறுவனம் பலம் வாய்ந்தது. பிரபலமானது. அமைச்சராக இருந்த போது அதிகார துஷ்பிரயோகம் செய்து 300 இணைப்புகளை பெற்றதாகவும் அதன்பின்னர் 700 இணைப்புகளை பெற்றதாகவும் பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறார்கள். இது முழுவதும் தவறானது.

அமைச்சர் அதிகாரத்திற்கு உட்பட்டு தான் செயல்பட்டுள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. மீண்டும் விசாரணை தேவையில்லை. எனவே முன் ஜாமீன் தர வேண்டும்.

இவ்வாறு ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார்.

தயாநிதியை கஸ்டடியில் எடுக்க 2 காரணங்கள்...

சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மனுதாரர் தயாநிதிமாறனை காவலில் எடுத்து விசாரிக்கவேண்டும். சன் டிவிக்கு இணைப்பு கொடுத்தாரா என்பது பற்றி விசாரிக்க வேண்டி உள்ளது.

அதாவது தயாநிதியை 2 காரணங்களுக்காக கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது.

தயாநிதிமாறன் 1,000 தொலைபேசி இணைப்புகளை முடக்கி அதில் 724 லைன்களை பயன்படுத்தி இருக்கிறார். ஒரு தனிநபர் இத்தனை இணைப்புகளையும் பயன்படுத்தி இருக்க முடியாது. ஆகையால் இதன் மூலம் உண்மையில் ஆதாயம் அடைந்தது யார்? என்பது தெரிய வேண்டும்;

அடுத்ததாக, தயாநிதி மாறனின் இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பது கண்டறிய வேண்டும்.

இந்த 2 காரணங்களுக்காகத்தான் தயாநிதியை கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு ஜி. ராஜகோபாலன் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 10-ந் தேதிக்கு வழங்குவதாக கூறி நீதிபதி வைத்யநாதன் ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+