காவிரி... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி தீர்ப்பு... பி.ஆர். பாண்டியன் வரவேற்பு #Cauveryverdict
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள உத்தரவை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வரவேற்றுள்ளார்.
காவிரியில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த இயலாது என கூறி, மாநில சட்டப்பேரவையில் கர்நாடக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் தீர்மானத்திற்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டத்தை தெரிவித்தது. மேலும் 3 நாட்களுக்கு 6000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து பி. ஆர். பாண்டியன் கூறியிருப்பதாவது:
காவிரியில் இருந்து நீரை திறந்து விட மாட்டேன் என்று சட்டப்பேரவையைக் கூட்டி கர்நாடக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும் காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுதான் சுப்ரீம் கோர்ட்டின் கண்டத்திற்கு ஆளாகி வருகிறது.
3 நாட்களுக்கு 6000 கன அடி நீரை திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. என்றாலும் அடுத்தடுத்த மாதங்களில் 100 முதல் 160 டிஎம்சி தண்ணீர் வரை சம்பா சாகுபடிக்கு தேவை என்று பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
