உற்பத்தி அதிகரிப்பு, கர்நாடக பொன்னி ரக வரத்து... தமிழகத்தில் அரிசி விலை குறைய வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் சமீப காலமாக அரிசி விலை வெகுவாக குறைந்து வருகிறது. இது மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெருமளவு நெல் பயிரிடப்பட்டு உள்ளது. சில பகுதிகளில் இந்த ஆண்டு மழை அளவு போதிய அளவு பெய்யவில்லை. பல பகுதிகளில் மழை நன்றாக பெய்து உள்ளது என்றாலும் வெள்ள சேதம் குறைவாகவே உள்ளது.

மேலும் காவிரிக்கரையோர விவசாயிகள் கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களை பெருமளவு தவிர்த்து நெல் சாகுபடி செய்துள்ளனர். எனவே இந்த ஆண்டு அதிகளவு நெல் சந்தைக்கு வரும். இதை கருத்தில் கொண்டு, மொத்த வியாபாரிகளும் அரிசி ஆலை அதிபர்களும் தாங்கள் தேக்கி வைத்து உள்ள அரிசியினை ஒரே நேரத்தில் பெருமளவு சந்தைப்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் அரிசி விலை குறைந்து வருகிறது.
தற்போது ஐ.ஆர்-20, கார் உள்ளிட்ட சாதாரண ரக அரிசி ரகங்கள் 25 கிலோ கொண்ட ஒரு சிப்பத்திற்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை விலை குறைந்து உள்ளது. மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் உற்பத்தியாகும் கர்நாடக பொன்னி, வெள்ளை பொன்னி போன்ற சன்ன ரக நெல் அதிக அளவு விற்பனைக்கு வந்து உள்ளதால் அவற்றின் விலையும் கணிசமாக குறைந்து வருகிறது.
வரும் ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் நெல் வரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் அரிசி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
