கார் பரிசை வச்சி என்ன செய்யுறது.. அரசு வேலை கொடுத்தால் நல்லாயிருக்கும்.. மாடுபிடி வீரர் கோரிக்கை
பாலமேடு: ஆடம்பர கார் வேண்டாம், அரசு வேலை கொடுத்தால் உதவியாக இருக்கும் என பாலமேடு மாடுபிடி வீரர் பிரபாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொங்கல் பண்டிகை என்றாலே பலருக்கு சர்க்கரை பொங்கலை காட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். அதிலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான வீரத்தை விளக்கும் இந்த விளையாட்டு மதுரை மாவட்டத்தில் நடக்கும்.

அவணியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மொத்தம் 6 ஆயிரம் காளைகள் அவிழ்த்துவிடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் டோக்கன் வழங்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரத்திலும் நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் 3,677 காளைகளும் 1412 மாடுபிடி வீர்களும் முன்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
மொத்தம் 781 காளைகள் வாடிவாசல் வழியே அவிழ்த்துவிடப்பட்டன. இதை பிடிக்க 485 வீரர்கள் களமிறங்கினார்கள். இந்த போட்டியில் அதிக எண்ணிக்கையில் 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரர் என்ற பரிசை பெற்றார். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக வழங்கினார்.
அது போல் 11 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் அருகே சின்னப்பட்டி தமிழரசனுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. அது போல் புதுக்கோட்டை மாவட்ட ராயவயல் பகுதியை சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் சின்னகருப்பு காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. இந்த காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த பிரபாகருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் கடந்த 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசையே தட்டி சென்றார். இவர் இந்த ஆண்டும் வென்ற நிலையில் அவர் அளித்த பேட்டியில் உயிரை பணயம் வைத்து விளையாடுகிறோம்.
கார் பரிசுக்கு பதிலாக அரசு வேலை கிடைத்தால் எங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும். மற்ற விளையாட்டுகளில் வென்றால் அரசு வேலை தேடி சென்று கொடுக்கப்படுகிறது. எனவே என்னை போன்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெல்வோருக்கு அரசு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications