எதிர்க்கட்சிகளின் வீழ்ச்சிக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களே காரணம்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

jayalalitha
சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு மீது புழுதிவாரி இறைக்கின்றவர்கள் பக்கம் மக்கள் இல்லை என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சிகளின் வீழ்ச்சிக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூட காரணமாக இருக்கலாம் என்றார்.

சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து ஜெயலலிதா பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

"ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

இந்த ஆளுநர் உரையில் உள்ள நல்ல அம்சங்களை, பாராட்ட வேண்டியவைகளைப் பாராட்டியும், அதில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை எல்லாம் தீர்த்து வைக்க ஆவன செய்ய வேண்டும் என்ற அளவிலேயும், இங்கே உறுப்பினர்கள் தங்களது உரைகளை ஆற்றியிருக்கிறார்கள்.

பொறுப்பற்ற பேச்சு

இந்த அவையில் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு இருந்தும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இந்த அரசின் மீது குற்றங்களை மட்டுமே சுமத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவைக்கு வெளியே இந்த ஆளுநர் உரை குறித்து மனம் போன போக்கில் சிலர் பேசியிருக்கிறார்கள். பொத்தாம் பொதுவாக பொறுப்பிலே இருந்தவர்கள் பொறுப்பிலே இருக்கின்றவர் பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார்கள்.

சுட்டிக்காட்டலாம்

எங்களை பொறுத்தவரையில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் திட்டங்களை தீட்டுகிறோம். அவ்வாறு தீட்டப்பட்ட திட்டங்கள் மக்களை சென்றடைகின்றன. திட்டங்களிலே ஒரு சில குறைகள் இருக்கலாம். திட்டங்கள் மக்களைச் சென்றடைவதிலே சில இடங்களில் சில குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டினால், அவற்றை சரிசெய்ய நாங்கள் தயங்க மாட்டோம். அதற்காக ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நல்லது கெட்டது உண்டு

எந்த திட்டம் ஆனாலும் எந்த செயல் ஆனாலும் நல்லதைக் காண்பதென்றாலும் காணலாம். கெட்டதைக் காண்பதென்றாலும் காணலாம். நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது தான் ஒவ்வொரு செயலிலும் நல்லதும் கெட்டதும். அவரவர்களுடைய மனதைப் பொறுத்து நல்லதும் கெட்டதும் தெரியும்.

குறைகளை குற்றங்களாக...

இங்கே பேசியவர்களில் சிலர் அரசு இயந்திரத்தில் உள்ள சில குறைகளை சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் அவற்றை குற்றங்களாக, குற்றச்சாட்டுகளாக எடுத்துக் கூறவில்லை. ஆனால், ஒரு சிலர் குறைகளையும், குற்றங்களாக சித்தரித்தனர். இதை, ஓர் உதாரணத்தின் மூலம் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பெற்றோர்களின் ஆதங்கம்

+2 படிக்கும் மாணவி நூற்றுக்கு நூறு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்கிறார். அவளுடைய பெற்றோரும் அந்த மாணவியின் நலனில் அக்கறை உள்ளோரும் அதைத் தான் விரும்புவார்கள். ஒரு வேளை அந்த மாணவி 96 மதிப்பெண் பெற்றால் கூட நூற்றுக்கு நூறு வாங்கும், திறமை இருந்தும் 4 மதிப்பெண்கள் குறைந்துவிட்டதே என்ற ஆதங்கம்தான் அவர்களிடம் வெளிப்படும். எஞ்சிய 4 மதிப்பெண்களை வரும் காலங்களில் பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்புதான் அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு

பொறமைக்காரர்கள்

இதேபோன்று தான் இங்கே குறைகளை சுட்டிக் காட்டியவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன். ஆனால், அதே நேரத்தில் அந்த மாணவியின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் 96 மதிப்பெண் என்ன பெரிய மதிப்பெண்? நூற்றுக்கு குறைவாக பெற்றால் 96 மதிப்பெண்ணும் ஒன்று தான், 40 மதிப்பெண்ணும் ஒன்று தான் என்று தங்கள் பொறாமையை, அழுக்காறை, ஆற்றாமையை வெளிப்படுத்துவார்கள். இல்லை என்றால் "சுலபமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நூற்றுக்கு நூறு வாங்கியிருக்க வேண்டும். 96 மதிப்பெண் என்பது குறைவு தான்" என்று கூறி, அந்த மாணவியின் சாதனையை சிறுமைபடுத்துவார்கள்.

அரசின் திட்டங்கள்

இவர்களைப் போன்றவர்கள்தான், இந்த அரசின் திட்டங்கள் குறித்தும், அவற்றை செயல்படுத்தும் விதம் குறித்தும், நியாயமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள். நிறைகளையும் குறைகளையும் ஆராய்ந்து பார்த்து, அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு தெளிவான முடிவுக்கு வர வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

சி.சுப்ரமணியம்- சி.என். அண்ணாதுரை

1961 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் நிறைவுக் கூட்டம். அடுத்து தேர்தல் நடைபெற இருந்தது. புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவை புதிதாக அமைக்கப்பட வேண்டும். இந்த நிறைவுக் கூட்டத்தில் அமைச்சர் சி. சுப்ரமணியம் மக்களவை தேர்தலில் நிற்கப் போகிறார் என்பதைத் தெரிந்து, அவரை வாழ்த்தி உறுப்பினர்கள் பேசினார்கள். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பேரறிஞர் அண்ணா, சி.சுப்ரமணியத்தை பாராட்டி பேசினார். அப்போது, "இன்றைய தினம், என்னுடைய கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் கோவிந்தசாமி, நம் நிதி அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தராகவும், இன்றைய தினம் சட்ட சபையின் நடவடிக்கைகளை நடத்திச் செல்லும் தலைவராகவும் அமர்ந்து நல்ல பணி ஆற்றிக் கொண்டு வருகிற கனம் சுப்ரமணியத்தை ஏசுநாதருக்கு ஒப்பிட்டுச் சொன்னார்கள். நல்ல உபதேசங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, ஏசுநாதருக்கு ஒப்பிட்டுச் சொன்னதைக் கேட்டு ஒரு கணம் சந்தோஷம் அடைந்தேன். ஐந்து வருட காலம் அவர்களோடு பழகிய நட்புரிமையோடு, கனம் சுப்ரமணியத்தோடு, ஏசுநாதரோடு நாமும் கூடிப் பழகி இருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்று மகிழ்ந்தேன்" என புகழாரம் சூட்டினார் பேரறிஞர் அண்ணா.

நாணயத்தின் இரு பக்கம்

சி.சுப்பிரமணியம் எழுந்து "சிலுவையில் அறையாமல் இருக்க வேண்டும்!" என்று கூறினார். அதற்கு அண்ணா தந்த அருமையான பதில், என்ன தெரியுமா? "மறுகணம் மருட்சி அடைந்தேன். ஏனென்றால், ஏசுநாதரின் சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக் கொடுத்தது போல், இந்த ஏசுநாதருக்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டும், என்று கவலைப்பட்டேன்" என்று கூறினார். அதாவது, உங்கள் கட்சிக்காரர்களால் தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர, எங்களால் அல்ல என்பதை அவ்வளவு அழகாக, நகைச்சுவையுடன் பதில் அளித்தார் பேரறிஞர் அண்ணா.

நாணயத்தின் ஒரு பக்கத்தை கண்டார் சி.எஸ். அதன் மறு பக்கம் கண்டார் பேரறிஞர் அண்ணா. எனவே, எல்லாவற்றிலும் இருக்கும் இரு பக்கங்களில், ஒன்றை மட்டும் பாராமல் இரு பக்கமும் பார்த்து கருத்துகளை தெரிவிப்பது நல்லது என்ற என் கருத்தை இங்கு நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அரசின் மீது களங்கம்

எனது தலைமையிலான அரசின் மீது புழுதிவாரி இறைக்க வேண்டுமே என்பதற்காக, மக்கள் மத்தியில் அ.தி.மு.க ஆட்சிக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டுமே என்பதற்காக, நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து இந்த அரசின் மீது குற்றங்களை சில உறுப்பினர்கள் சுமத்தி இருக்கிறார்கள். மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வரும் எனது தலைமையிலான அரசின் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புழுதிவாரி இறைக்கின்றவர்கள் பக்கம் மக்கள் இல்லை. அவர்களும் மக்கள் பக்கம் இல்லை.

குடும்ப உறுப்பினர்கள்தான்...

பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது போல, அவர்களது வீழ்ச்சிக்கு அவர்களது அழிவுக்கு, அவர்களது கட்சிக்காரர்கள் தான் காரணமாக இருப்பார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூட காரணமாக இருக்கலாம். எங்களைப் பொறுத்த வரையில், எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் இருக்கிறோம். ஏனெனில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகின்ற எங்கள் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் பக்கம் நாங்கள் இருக்கிறோம்.

குறைகள் களையப்படும்

ஆளுநர் உரை குறித்து தெரிவிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான கருத்துகள் நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகளில் உண்மை இருக்குமானால் அவை நிச்சயம் களையப்படும் என்பதையும் நான் முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+