திமுக தலைவர் கருணாநிதிக்கு பேரறிவாளன் அம்மா அற்புதம்மாள் கோரிக்கை
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் திடீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரமதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் சென்னை பத்தரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மரியாதைக்குரிய தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு என் பணிவான வேண்டுகோள். கடந்த 23 ஆண்டு காலமாக எந்த தவறும் செய்யாமல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எனது மகன் பேரரிவாளன் உள்ளிட்டோரின் "உயிர் வலி" தாங்களும் நன்றாகவே அறிவீர்கள்.

கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று அவர்கள் நிரபராதிகள் என்று ஓயாமல் போராடி, அதன் விளைவாக இன்றைக்கு எஞ்சிய வாழ்க்கையாவது அவர்களுக்கு கிடைத்துவிடும் என்ற மிகுந்த நம்பிக்கையோடு இருக்கும் இந்த வேளையில் எங்களின் இதயங்களில் ஈட்டி பாய்ச்சுவது போல் அமைந்துவிட்டது, எழுவர் விடுதலை வழக்கு பற்றிய தங்களின் நேற்றைய கருத்து.
23 ஆண்டுகளின் மனவலி என்ன என்பதை ஒரு தாயின் இடத்திலிருந்து தயவு செய்து யோசித்துப் பாருங்கள். எப்படியும் எனது மகன் உள்ளிட்டோருக்கு நியாயம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நிறைவேறிய வேளையில் தாங்கள் இப்படி ஒரு கருத்தை பரப்புவது எங்களுக்கு கிடைத்த நீதியை பறித்தது போல் இருந்தது.
இந்த எழுவருக்காகவும் நீதி வெல்ல வேண்டும் என்பதற்காகவும் தமிழகம் மற்றும் உலகம் முழுக்க பல்வேறு காலகட்டங்களில் பலரும் பங்களித்து இருக்கின்றனர். இவர்கள் நிரபராதி என்பது குறித்த ஆவணங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இவர்களது விடுதலையை ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் தருணத்தில், அவ்விடுதலையை தள்ளிப்போடும் விதமாக தாங்கள் கருத்து தெரிவித்திருப்பது மிகுந்த மனவேதனையை பலருக்கும் அளித்திருப்பதை என்னோடு பகிர்ந்து கொண்டனர்.
தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த வழக்கில் இதுவரை மறுக்கப்பட்ட உரிய நீதி கிடைக்கும் வரை அதனை பாதிக்க செய்யும் எவ்வித அரசியல் கருத்துகளையும் வெளிப்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதி கூறிய ஒரு கருத்து அரசியல் அரங்கில் பயணம் செய்யத் தொடங்கியதை அடுத்து, அற்புதம்மாள் செய்தியாளர்கள் மூலம் இந்த வேண்டுகோளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications