கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சதி! கரெக்டா இந்த நேரத்துல எப்படி? சந்தேகம் கிளப்பும் பீட்டர் அல்போன்ஸ்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் சட்டசபை கூடும்போது ஏன் நடக்க வேண்டும்? நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களை வென்ற திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற திட்டமிடலோடு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டதோ என சந்தேகம் எழுப்பி உள்ளார் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 54 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக அரசின் நல்ல பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த மரணங்களுக்கு பின்னால் அரசியல் சதி ஏதும் உள்ளதா என சந்தேகம் கிளப்பி உள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.

தென்காசி அருகே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநில சிறுபான்மையினர் துறை ஆனையர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த கள்ளச் சாராய குடித்து ஏராளமானோர் உயிரிழந்திருப்பது மன வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. அரசு உடனடியாக அதிரடியாக நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர், மதுவிலக்கு காவல்துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்று வெற்றி பெற்ற திமுக, சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை அறிவிக்க தயாராக இருந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் சட்டசபை கூடும்போது ஏன் நடக்க வேண்டும்? திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற திட்டமிடலோடு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டதோ என சந்தேகம் எழுந்திருக்கிறது.
மேலும் இந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்வதற்காக நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் விசாரணையானது துவங்கி இருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு நீதியரசரின் விசாரணை ஆணையம் துரிதமாக விசாரிக்கும் என நம்புகிறேன்.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டாலும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு கள்ளச் சாராயம் விற்பவர் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார் அதேபோல் குடிப்பவர்களும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் அதில் விஷம் கலக்க வேண்டிய அவசியம் என்ன என்பதையும் விசாரணை குழு துரிதமாக விசாரிக்க வேண்டும்.
நாட்டில் போதைப் பொருள் கடத்தல் என்றாலும் குஜராத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது. நீட் தேர்வு முறைகேடு என்றாலும் குஜராத்தில் இருந்து தான் ஆரம்பமாகிறது. வங்கிகளில் மோசடி என்றாலும் குஜராத்தில் இருந்து தான் ஆரம்பமாகிறது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். அவரை எதிர்த்து போட்டியிடும் பாமக வேட்பாளர் டெபாசிட் தொகையை இழப்பார்” என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications