அம்மா... அம்மம்மா... கரூரில் பரவசப்பட்ட மதுரை ஆதீனம்... சாமியாடிய பெண் தொண்டர்
கரூர்: கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பித்துரையை ஆதரித்து பிரசாரம் செய்த மதுரை ஆதினம், முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி பேசும் போது... பக்திப் பரவாசத்தோடு பேசி கட்சியினரையே புல்லரிக்க வைத்தார்.
மதுரை ஆதினம் கன்னியாகுமரி தொடங்கி பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். போகுமிடமெங்கும் ஜெயலலிதாவை போல்ட் லேடி, புரட்சித்தலைவி, சிங்க நிகர் தலைவி என்றெல்லாம் புகழாரம் சூட்டி வருகிறார்

பரவசத்தில் ஆதீனம்
கரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம், முதல்வர், ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் பதவி நாற்காலியில் அமருவார் என்றும், அதற்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அதோடு மட்டுமல்லாது... அம்மாவுக்கு நிகர் அம்மாதான்... அம்மம்மா என்று பரவசப்பட்டார்.

சாமியாடி பெண்
தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பிரசாரத்தை வேடிக்கைப் பார்க்க வந்த பெண் ஒருவர், பிரசார பாடலுக்கு பதிலாக சாமி பாடல் ஒலித்ததைக் கேட்டு சாமியாடினார்.

தண்ணி எங்கப்பா?
அதேபோல தேனி தொகுதியில் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற ஆண்டிபட்டி அதிமுக எம்.எல்.ஏ தங்கத் தமிழ் செல்வன், கேள்வி கேட்ட வாக்காளர்களைப் பார்த்து வாய்யா, போய்யா என்று ஒருமையில் பேசினார். நீ திமுக காரன்தானே? உன்னோட ஆட்சியில ஏன் இதை செய்யலை? எங்களை கேட்க நீ யாரு என்றார்.

சாலை மறியல்
அதேபோல மதுரை லோக்சபா தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக மேலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக எம்.எல்.ஏ சென்ற காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி பாசம்
அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்க வந்த நடிகர் சிங்கமுத்து, திடீரென பாட்டாளி மக்கள் கட்சி என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தவறு, தப்பு,விளக்கம் சொன்ன ஆர்த்தி
தேர்தல் பிரசாரத்தில் நடிகை ஆர்த்தியின் பேச்சு களைகட்டுகிறது. அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த ஆர்த்தி, தவறு என்பது தவறி செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் திருந்தி ஆகணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் என்று பாடி அசத்தினார்.

ஸ்டெடியா நிக்கச் சொல்லுங்க
அதோடு மட்டுமல்லாது தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஒரு 5 நிமிஷம் முதல்ல ஸ்டெடியா நிற்கச் சொல்லுங்க பார்ப்போம் என்றும் கூறினார்.

குஷ்பு என்னா கலரு…
திமுகவின் ஸ்டார் பேச்சாளர் குஷ்பு கடந்த 5ம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். வெயிலிலும் தக தக வென ஜொலிக்கும் உடையணிந்து பிரசாரம் செய்யும் குஷ்புவைக் காண ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் கூட்டமும் அலைமோதுகிறது. குஷ்பு செக்கச் செவேல்னு இருக்குல்லடி என்று பேசிக் கலைகின்றனர் பெண்கள்.

சரத்குமார் கன்னத்தில குழி விழுதா?
அதேபோல அதிமுகவிற்காக பிரசாரத்திற்கு போகும் சரத்குமார், அங்கிருக்கும் பெண்களிடம், மறக்காம இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க... அதை விட்டு சரத்குமார், கலரா இருக்காரா? ராதிகா வீட்டுக்காரர் பேசுனா கன்னத்தில குழி விழுதே அப்படின்னு சொல்லிட்டு ஓட்டு போட மறந்துடாதீங்க என்று கூறி சிரிக்க வைக்கிறார்.

அந்த காலத்தப் போல…
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு எம்.ஜி.ஆர் பிரசாரத்திற்கு வருகிறார் என்றாலே ஊரே திரண்டு நிற்கும். அவர் பேசுவதை கேட்பார்களோ இல்லையோ ஆனால். பார்த்துக் கொண்டே நிற்பார்கள். என்னா கலரு எம்.ஜி.ஆரு என்று பேசிக்கொள்வார்கள்.

சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்
அதேபோல நடிகர்கள் சிவாஜி, எஸ்.எஸ். ஆர் ஆகியோருக்கும் கூட்டம் கூடும். பேசுவதை கேட்க மக்கள் கூடுவார்கள். ஆனால் இன்றைக்கோ வாக்காளர்களை கவரும் வகையில் பேசத்தான் ஸ்டார் பேச்சாளர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது என்கின்றனர். மவுசு இழந்த நடிகர்களும், காமெடி நடிகர்களும் பேசும் பேச்சு ரசிக்கும்படியாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

டூப் எம்.ஜி.ஆர் வரார்
ஆனாலும் கூட்டத்தை கூட்ட டூப் எம்.ஜி.ஆர், டூப் விஜயகாந்த் ஆகியோர் வந்து நடனமாடி பிரசார களங்களில் மக்களை கவர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications