கூடங்குளம் பிரச்சனையை அடுத்தக் கட்டத்துக்குக் நகர்த்த தேர்தல் அரசியலே வழி: சுப. உதயகுமாரன்
இடிந்தகரை: கூடங்குளம் அணு உலை பிரச்சனையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த பிடிக்காமல் போனாலும் தேர்தல் அரசியலே வழி என்று போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று சுப. உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மனக்குழப்பத்தில்...
எனது 54 வருட வாழ்க்கையில் இப்படி ஒரு மனக்குழப்பம் நான் அடைந்ததேயில்லை. தேர்தல் அரசியலுக்கு வரப் பிடிக்கவில்லை, ஆனால் அணுஉலைப் பிரச்சினையை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுபோக தேர்தல் அரசியலுக்கு வராமல் வேறு வழியுமில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான பண பலமோ, படை பலமோ, அரசியல் பின்புலமோ எதுவுமில்லை. ஆனால் போட்டியிட்டுத்தான் போராட்டத்தையும், போராடும் மக்களையும் காத்துக்கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலை.
தேர்தலில் நின்று தோற்றால், "இவன் போராட்ட ஆதரவு இவ்வளவுதான் என்று ஏளனம் செய்ய, இளக்காரமாய் பேச ஏராளமானோர் காத்திருக்கின்றனர். போராட்டத்தை, பொதுவாழ்வை, முடிந்தால் மொத்தக் கதையையே முடித்து, முற்றுப் புள்ளிவைக்க பலர் முனைந்து நிற்கின்றார்.
கொள்ளையடிப்போரை, குடும்பத்துக்காக உழைப்போரை, கொள்கைகளில்லாதோரை தலைவராக ஏற்றுக்கொண்டு எதையும் செய்யத் துணியும் விசுவாசத் தொண்டர்களாய் வீர உலா வருவோரிடம் "கூடங்குளமா, கூட வரப் பணமா" என்றால், பணம்தான் என்பர். "கெயிலா குவாட்டாரா" என்றால், குவாட்டர்தான் என்று கும்பிட்டு நிற்பர். "மீத்தேனா, உனக்கும் கொஞ்சம் தேனா" என்றால், எனக்கும் கொஞ்சம் தேன்தானென்பர். இந்தச் சூழலில் "எதை நம்பி தேர்தல் அரசியலில் இறங்குகிறீர்கள்?" என்று கேள்வி கேட்கும் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என்னையும், என் தோழர்களையும் நம்பி போராட்டக் களத்தில் குதித்து, ஏராளமான தியாகங்கள் செய்து, சுமார் 350 வழக்குகளை வாங்கிச் சுமந்து கொண்டிருக்கும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களை கரையேற்றிவிடும் பெரும் பொறுப்பு என்னை ஆழமாக சிந்திக்க வைக்கிறது.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரானப் போராட்டத்தை அ.தி.மு.க. அரசும், காங்கிரசு அரசும், பிற பெரியக் கட்சிகளும் கண்டுகொள்ளாத நிலையில், என்ன செய்வது என்கிற விடை தெரியாத கேள்வியோடு அல்லாடிக் கொண்டிருக்கிறோம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி வெற்றி பெற்றாலும் சரி, அல்லது பா.ஜ.க. அரசு அமைத்தாலும் சரி, கூடங்குளம் திட்டத்தை அமுல்படுத்துவார்கள், விரிவாக்கம் செய்வார்கள். எனவே நாம் ஒரு மாற்று அரசியலை கையிலெடுத்து, மாற்றான கட்சி ஒன்றை ஆதரித்து, மாறுபட்ட ஒரு யதார்த்தத்தை நமக்கு உருவாக்கிக்கொள்ள முயலுவோமே என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
நாடாளுமன்ற அரசியல் மூலமாக மாற்றமா?
இறைமை என்பது கோவில் கருவறைக்குள் கடவுள் சிலையாக தனிமைப்படுத்தப்பட்டு, அன்னியப்படுத்தப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ளது. கோவிலை நிர்வகிக்கும் தாதா தர்மகர்த்தாக்களும், அவர்களின் குடும்பத்தினரும் அங்கே ஆதிக்கம் செலுத்துகின்றனர். மந்திரம் சொல்லிப் பிழைக்கும் சாஸ்திரிகளும், சன்னியாசிகளும், பூசாரிகளும் தர்மகர்த்தாக்களை அனுசரித்து, தங்கள் வயிற்றைக் கழுவுகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களைப் பிடித்து அபிஷேகம் செய்யவைத்து, தமக்குக் கிடைப்பதை எடுத்துக் கொண்டு கோவில் நிர்வாக அமைப்பை தக்க வைத்துக்கொள்ள கடைநிலை குருக்கள் ஓயாது உழைக்கின்றனர்.
இதே போலத்தான் "அதிகாரம்" எனும் "அரசியல் சக்தி" நாடாளுமன்றக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு, அன்னியப்படுத்தப்பட்டு பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. டாடாக்களும், பிர்லாக்களும், அம்பானிகளும், மிட்டல்களும், பன்னாட்டு நிறுவனங்களும் தர்மகர்த்தாக்களாய் அங்கே ஆதிக்கம் செலுத்துகின்றனர். கதர்களும், காவிகளும், காம்ரேடுகளும், கழகங்களும் அங்கே பூசாரி வேலை செய்கின்றனர். எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் அபிஷேகத்துக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் குருக்கள் போன்றவர்கள்தான். இந்த குருக்களில் ஒருவராகி நாம் எந்த சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சார மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பதுதான் உண்மை.
ஆனாலும் "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" என்று வள்ளுவர் சொன்னது போல, தனக்குவமை இல்லாத அரசியல் சக்தியை அடையாத பட்சத்தில், வாழ்க்கைப் பிரச்சினைகளை மாற்றுவது அரிது என்பது தெளிவு. அந்த அதிகாரம் இல்லாத மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள், ஆதிவாசிகள், தலித் மக்கள், பெண்கள், சிறுபான்மையோர் என யாரும் தங்களுக்கு வேண்டிய எதையும் சாதிக்க முடியாது என்பதுதான் உண்மையான நிலை.
மக்கள் விரோத தேசிய கட்சிகள்..
கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினையில் தேசியக் கட்சிகள் மக்கள் விரோத நிலையைத்தான் எடுக்கிறார்கள். குறிப்பாக, தமிழகத்தை, தமிழ் நாட்டைப் பொருத்தவரை, இது மிகவும் உண்மை. அதிக அணுசக்தி வேண்டும், கூடுதல் அணுவாயுதங்கள் வேண்டும் என்பது பா.ஜ,க.வின் முற்பிறவியான ஜனசங்க் கட்சி காலத்திலிருந்தே "சங் பரிவார்" கொண்டிருக்கும் கொள்கை. கொள்ளையடிப்பதையும், வெளிநாட்டினருக்கு நாட்டை விற்பதையும் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் காங்கிரசும் அணுசக்தி, அணுவாயுதக் காமத்தில் சிக்கிக் கிடக்கிறது. கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலாரில் புதைக்க விட மாட்டோம் என்பதில் காங்கிரசும், பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் மிக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்கள். கேரளாவில் அணுமின் நிலையம் போன்ற எந்த அழிவுத் திட்டம் அமைப்பதாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தெளிவாக நின்று எதிர்க்கிறார்கள். சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரசு போன்ற கட்சிகளிடம் அணுசக்திப் பிரச்சினையில் ஒரு நிலைப்பாடு எடுங்கள் என்று மன்றாடினாலும், எந்தவிதமான பயனும் இல்லை.
தமிழகக் கட்சிகளைப் பொறுத்தவரை, தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அதிகாரம் பெறுவதிலும், தங்கள் ஊழல் சாம்ராஜ்யங்களை, ஆதிக்க அரண்மனைகளை தக்க வைப்பதிலும் குறியாக இருக்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு சுயநலவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம்தான் அடிப்படைக் கொள்கைகள். இவர்களில் பெரும்பாலோர் ஏழை எளிய மக்களுக்காக அரசியல் நடத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்பாவி மக்களிடமிருந்து தங்களுக்கான வாக்குகளைப் பெறுவது ஒன்றே இவர்களின் இலக்கு என்பதும் புரிகிறது. தி.மு.க.-அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, அவர்களுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வேண்டும், தில்லியிலே அதிகாரம் வேண்டும், அமைச்சர் பதவிகள் வேண்டும், ஏராளமானப் பணம் வேண்டும். அங்கே ஈழத்தமிழர் பாசமோ, இங்குள்ள தமிழர்மீது அன்போ எதுவும் கிடையாது.
தேர்தல் அரசியலில் பங்கேற்கும் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும், மனிதநேய மக்கள் கட்சியும் நமது போராட்டத்திற்கு பல்வேறு வழிகளில் உதவினார்கள்; உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ம.தி.மு.க. அண்மையில் ஓர் அருமையான ஆதரவு அறிக்கை வெளியிட்டது. அது போல ம.ம.க.வும் ஆதரவான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்கள். மீண்டும் ஒருமுறை இந்தக் கட்சிகளுக்கும், கட்சி தலைவர்களுக்கும், நமக்கு ஆதரவளித்துவரும் பிற கட்சிகளுக்கும் நாம் நமது அன்பான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்குறிப்பிட்ட கட்சிகள் தற்போது அணுஉலைக்கு ஆதரவான கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டிருப்பதால் பேச முடியாமல் இருக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் நமது பிரச்சினையை அவர்களால் சேர்த்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. இந்த நிலையில் நமது பிரச்சினையை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சாதுரியத்துடன் செயல்பட வேண்டுமே..
தமிழகக் கட்சிகளையும், இயக்கங்களையும் "ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு" என வகைப்படுத்தி, நமக்கென நின்ற கட்சிகளை கைகோர்த்து நிற்கச் சொன்னோம் நாடாளுமன்றத் தேர்தலில். ஐந்து முறை இடிந்தகரையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தினோம், முயற்சிகள் எடுத்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவேதான் நமக்கு ஆதரவளிக்கும் எளிய மக்கள் கட்சியை (ஆம் ஆத்மி கட்சியை) நாம் ஏறெடுத்துப் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
அது ஒரு வட இந்தியக் கட்சி என்பதும், அவர்கள் தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் பற்றிய ஆழமான புரிதல் இல்லாதவர்கள் என்பதும் உண்மைதான். கூடங்குளம், கல்பாக்கம், தேவாரம், மீதேன், கெயில் போன்ற தமிழர் விரோதத் திட்டங்களை தடுத்து நிறுத்த, காவிரி நதிநீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, ஹொகனேக்கல் பிரச்சினை, இராமேசுவரம் மீனவர் பாதுகாப்புப் பிரச்சினை போன்றவற்றில் தமிழர் நலம் காக்க, காங்கிரசு, பா.ஜ.க. தவிர்த்த அரசு டில்லியில் வேண்டும்; எளிய மக்கள் கட்சி (AAP)தான் ஒரே வழியாகத் தெரிகிறது. நாடாளுமன்றத்தில் ஓரளவு கணிசமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பார்கள் என நம்பலாம். நமக்காகக் குரல் கொடுக்குமாறு வற்புறுத்தலாம்.
தமிழர்களாகிய நாம் உணர்ச்சிவசப்பட்டு வீரவசனம் பேசினால் மட்டும் போதாது, நாசூக்காக செயல்பட்டு நமக்காகக் காரியங்கள் நடத்திக் கொள்ளும் சாதுரியத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின்போது, காங்கிரசு கட்சியின் அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்தது; பா.ஜ.க. பாராமுகமாக இருந்தது. ஏ. கே. அந்தோணி, சிவசங்கர் மேனன், எம். கே. நாராயணன், சதீஷ் நம்பியார், விஜய் நம்பியார் என நமக்கு வேண்டாதவர்கள் ஆக்கிரமித்திருந்த இடங்களில் ஒரு தமிழன் இருந்திருந்தால், ஈழப் படுகொலையின்போது நம் மக்களுக்கு நாம் கொஞ்சமாவது உதவியிருக்கலாம். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அய்யாவுக்குப் பின்னாலும், அம்மாவுக்குப் பின்னாலும் ஒளிந்து கொண்டிருந்தார்கள், இப்போதும் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கு உடனடியாக, அவசரமாக நாடெங்கும், நாட்டின் தலைநகரெங்கும் நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். கூடங்குளம், கல்பாக்கம், தேவாரம், மீதேன், கெயில் போன்ற தமிழர் விரோத திட்டங்களைத் தடுத்து நிறுத்த நாம் மட்டும் இங்கே தனித்து நின்றுப் போராடி பலனில்லை.
இந்தி(ய) ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாகிவிட்டான் பார், நம்மையும் அடிமைப்படுத்தப் பார்க்கிறான் பார் என்றெல்லாம் குற்றஞ்சாட்டுகிறவர்கள் வேறு ஏதாவது உருப்படியானத் திட்டம் இருந்தால் சொல்லுங்கள்; இங்குள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒன்றாக நின்று தமிழர்களுக்காகப் போராடுவதாய் இருந்தால் உடனேத் தெரிவியுங்கள். நாங்கள் உறுதியாக உடன்படுகிறோம்.
இல்லையெனில்... வாருங்கள் எளியோரே, வந்திடுங்கள் இளையோரே! வகையாய் நடத்திடுவோம் தமிழகத்தில் முழுப் புரட்சி!! வணக்கம்!
இவ்வாறு சுப. உதயகுமாரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications