லோக்சபா தேர்தலுக்கு முன்பே சூடு பிடித்த 'தருமபுரி' தொகுதி! அன்புமணிக்கு வாக்கு கேட்கும் பாமக!!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு முன்பே தருமபுரி தொகுதியில் களைகட்டியிருக்கிறது. இத்தொகுதியை எப்படியும் கைப்பற்றியே தீருவது என வாழ்வா சாவா போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.
தருமபுரி தொகுதியில் 5 லட்சம் வன்னியர்கள் வாழ்கின்றனர். அதே நேரத்தில் தலித் மக்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
தருமபுரியைப் பொறுத்தவரையில் வரப்போகும் லோக்சபா தேர்தலில் நிச்சயமாக சாதிதான் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக இருக்கும். இளவரசன் ,திவ்யா காதல் விவகாரத்தில் வன்னியர்களின் வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள பாமக மும்முரம் காட்டுகிறது.

அன்புமணி போட்டி?
அத்துடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிதான் தருமபுரி வேட்பாளர் என்ற பிரசாரத்தையும் பாமக முன்னெடுத்து இப்போதே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

அதிமுக வேட்பாளர் யார்?
அதிமுகவை பொறுத்தவரையில் டி.ஆர். அன்பழகன் மற்றும் பாலக்கோடு எம்.எல்.ஏ. கே.பி அன்பழகன் ஆகியோரில் ஒருவர்தான் வேட்பாளராம்.

அன்பழகன்கள்..
இரண்டு அன்பழகன்களில் எவரை நிறுத்தினாலும் வெற்றி என்பதுதான் முடிவாக இருக்க வேண்டும் என்பது அதிமுக மேலிட உத்தரவாம். இதனால் பாமகவை, வன்னியர்களிடம் இருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறதாம் அதிமுக தரப்பு.

திமுக வேட்பாளர் தாமரைச்செல்வன்?
திமுகவில் தாமரைச்செல்வனைத்தான் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்கிறார்கள் உடன்பிறப்புகள். இவர் பொதுவான சமூகத்தினர் என்பதால் வன்னியர் மற்றும் தலித் வாக்குகளை எளிதில் கைப்பற்றலாம் என்பதுதான் திமுகவினர் வாதம்.
செங்கோட்டையை கைப்பற்றுவதை விட தருமபுரி கோட்டையில் வெல்வதுதான் இங்கு முதன்மை பிரச்சனை!












Click it and Unblock the Notifications