முயல் தீவில் மிதந்த 4 'உடல்கள்'.. தகவலால் பரபரப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள முயல் தீவில் சிலர் இறந்த நிலையில் கடலில் மிதப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். கடைசியில் பார்த்தால் நான்கு சிறுவர்கள் ஜாலியாக கடலில் உள்ள போயாவில் ஓய்வாக மிதந்து கிடந்தது தெரிய வந்து அவர்களை போலீஸார் மீட்டு வந்து, எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி அருகே இருக்கிறது முயல்தீவு. இந்த கடல் பகுதியில் மீனவர்கள் சிலர் மீன்பிடிக்க சென்று திரும்பும் போது முயல்தீவு அருகே கடலில் உடல் அசைவு இல்லாமல் மிதப்பதை பார்த்தனர். இது குறித்து தருவைகுளம் கடல் காவல் பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து படகில் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தெர்மாகோலால் படகு போல் செய்யப்பட்ட 3 போயாவில் 4 சிறுவர்கள் கடலில் மிதந்தவாறு தூங்கி கொண்டிருந்தனர்.
கடலோர பாதுகாப்பு குழு போலீசார் அந்த 4 சிறுவர்களையும் எழுப்பி தங்கள் படகில் அழைத்து வந்து பெற்றோர்களிடம் ஓப்படைத்து எச்சரிக்கை செய்து அனுப்பினர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி திரேஸ்புரம் மட்டுபட்டியை சேர்ந்த அழகுராஜா, முத்துகிருஷ்ணன், சக்திவேல், மாரிசெல்வம் என்பது தெரிய வந்தது.
இவர்கள் கனவாய் மீன்பிடிப்பதற்காக போயா என்று அழைக்கப்படும் தெர்மாகோலால் செய்யப்பட்ட படகில் முயல்தீவு அருகே சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக போயாவில் படுத்து தூங்கியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் யாரோ மீனவர்கள் தான் இறந்து கிடப்பதாக தவறான தகவலை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியே ஒரு மணி நேரத்திற்கு பரபரப்பாகிப் போனது. தூத்துக்குடி அருகே உள்ள சில தீவுகளில் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications