அமைதியாக போராடிய மாணவர்கள் ஏன் இப்படி ஒரு அடக்குமுறை?... என்ன கொடுமை இது!
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கோரி அமைதியாக போராடிய இளைஞர்களும், மாணவர்களும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: உலகுக்கே பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் மிக மிக அமைதியாக, கட்டுக்கோப்பாக நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு கலைத்துக் குட்டிச் சுவராக்கி விட்டனர். எந்த சலசலப்பும் இல்லாமல் நடந்து கொண்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி பெரும் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளது தமிழக காவல்துறை.
உலகமே வியக்கும் வகையிலான ஒரு அறவழிப் போராட்டத்தை, மக்கள் இயக்கத்தை, இளைஞர்களின் எழுச்சியை, வரலாறு காணாத புரட்சியை ஒரே நாளில் ஒடுக்கி விட்டனர். குண்டுக்கட்டாக தூக்கியும், தரதரவென இழுத்தும், அடித்தும் இழுத்துச் செல்லம் காவல்துறையின் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் என்ன தேச விரோத செயலில் ஈடுபட்டார்களா, யாருக்கேனும் தீங்கு இழைத்தார்களா. என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்.. பொதுமக்கள் வெம்பிப் போய் வேதனையுடன் டிவிகளைப் பார்த்துக் கொண்டு கொதித்து நிற்கிறார்கள்.

ஏன் இப்படி?
இந்த அளவுக்கு ஏன் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல வேண்டும், திடீரென காவல்துறைக்கு என்ன நிர்ப்பந்தம் வந்தது, யாருக்கு என்ன பாதிப்பு வந்து விட்டது, யாருக்காக இப்படி ஒரு அதி வேகம் காட்டப்படுகிறது என்பதை காவல்துறை மக்களுக்கு நிச்சயம் வெளிப்படுத்த வேண்டும் என்பதே தமிழகம் முழுவதும் ஒரே குரலாக மக்களின் கோபம் வெளிப்படுகிறது.
எத்தனையோ வழிகள் உள்ளதே
அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்றால் எத்தனையோ அறவழிகள் உள்ளன. அதைப் பயன்படுத்தி அமைதியான முறையில் போலீஸார் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்திருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு அதிகாலையில் அதி வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயம் என்ன?

பதவியில் உள்ளோரைத் திருப்திப்படுத்தவா?
முதல்வரும், அமைச்சர்களும் பாதுகாப்பாக போவதை உறுதி செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கெல்லாம் இந்தப் பதவி கிடைக்க, சொகுசு கிடைக்க, அதிகாரம் கிடைக்க காரணமாக இருந்த மாணவர்களையும், இளைஞர்களையும் இப்படிததான் கஷ்டப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டுமா.. அதுதான் நியாயமா என்று மக்கள் வேதனைப்படுகிறார்கள்.

நிதானித்திருக்க வேண்டாமா?
போலீஸார் சற்று நிதானித்திருக்க வேண்டும். மெரீனா கடலில் போய் மாணவர்கள் நிற்கிறார்கள். ஏதாவது விபரீதம் என்றால் யார் அதற்குப் பொறுப்பு. கோவையில் பெண்களைக் கூட விடாமல் தரதரவென இழுத்துச் செல்கிறார்கள். மூதாட்டியைப் பிடித்துத் தூக்கி அப்புறப்படுத்த முனைகிறார்கள். குழந்தைகளைக் கூட விடவில்லை.

ஏன் இப்படி முரட்டுத்தனம்?
ஏன் இந்த முரட்டுத்தனம்.. எதற்காக இந்த திடீர் அடக்குமுறை. இத்தனை நாட்களாக காவல்துறை தங்களுக்கு நண்பனாக இருந்து வந்ததாக பெருமைப்பட்டு வந்த தமிழ்ச் சமுதாயத்திடம் இன்று ஒரே நாளில் கெட்ட பெயர் வாங்கி விட்டது வேதனை தருகிறது.
நிச்சயம் இதை விட பெட்டராக இந்த நிலைமையை கையாண்டிருக்கலாம்.. கையாண்டிருக்க வேண்டும்... காரணம் கூடியிருந்தது இளைஞர்களும், பெண்களும், மாணவர்களும் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த சமுதாயம் அது.












Click it and Unblock the Notifications