பறக்கும்படை கண்முன்னே கனஜோராக நடக்கும் பண பட்டுவாடா
நெல்லை: இரவோடு இரவாக ஆளும்கட்சியினர் ஓட்டுக்காக பணம் வினியோகம் செய்ததால் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றனர்.
தமிழகம், புதுவையில் நாளை காலை 7 மணிக்கு வாக்கு பதிவு நடக்கிறது. இந்த நிலையி்ல் ஆளும் கட்சி சார்பில் அந்தந்த வட்ட செயலாளர்கள் இரவோடு இரவாக அழைக்கப்பட்டு ஓட்டுகளுக்கு பணம் வினியோகித்தனர்.
பாளை மார்க்கெட், வண்ணார்பேட்டை, சங்கரன்கோவில், விகேபுரம் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வட்ட செயலாளர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து கட்டு கட்டாக பணம் வழங்கப்பட்டது.
வட்ட செயலாளர்கள் 50 பேருக்கு ஒருவர் என குழு அமைத்து இரவோடு இரவாக அனைத்து வீடுகளுக்கும் பணம் வினியோகி்க்க பட்டதாக கூறப்படுகிறது. ஆட்களுக்கு தகுந்த மாதிரி ரூ.100, ரூ.200, ரூ.300 என வீடு, வீடாக பணம் வினியோகம் செய்யப்பட்டதால் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக ஆண்கள் யாருக்கும் பணம் கிடைக்கவில்லை. அந்தந்த வார்டுகளில் உள்ள வீடுகளில் பெண்களை மட்டுமே குறியாக வைத்து பணம் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி தொகுதிகளில் அதிமுகவினர் பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் வேட்பாளர்களுக்கு கட்சியில் சீனியர்களின் ஒத்துழைப்பு இல்லை. தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் வழங்கப்படவில்லை எனதொண்டர்கள் குமுறல் தெரிவிக்கின்றனர்.
ஆனால் கடைசி நாளுக்கு முந்தைய நாள் வேட்பாளர்கள் அனைவரும் சென்னையில் இருக்கும் நிலையில் இரவோடு இரவாக வீடுகளை குறி வைத்து ஆளும் கட்சியினர் டோர் டெலிவரி செய்தது எதிர்கட்சி வேட்பாளர்கள், போட்டி வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
இந்த பண பட்டு வாடாவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் கண்டு கொள்ளாதது தான் வேடிக்கையாக இருக்கிறது என பல கட்சியை சேர்ந்தவர்களும் புலம்ப தொடங்கியுள்ளனர். பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் கடுமை காட்டி அவர்களிடம் பல கோடிகளை பறிமுதல் செய்த பறக்கும படையினர் இதை தடுக்க தவறியது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications