காலாவுக்காக கர்நாடக முதல்வரிடம் தமிழகம் கெஞ்ச வேண்டும் என்கிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்?
சென்னை: காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வைக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்ய வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதன் மூலம், அதிகாரத்தோடு பெற வேண்டிய உரிமையை கெஞ்சி பெற வேண்டும் என கூற விழைந்துள்ளார்.
காவிரியிலும் பாஜக நிலைப்பாடு இதுவாகத்தான் உள்ளது. இப்போது காலாவிலும் அதே போல தமிழகத்தை கெஞ்ச வைக்கத்தான் முயற்சி நடக்கிறது.
காவிரி ஆணையம் அமைத்து, கர்நாடகா உள்ளிட்ட காவிரி தொடர்பான மாநிலங்களின் அணைகளை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, நடுவர்மன்றம் உத்தரவிட்ட பிறகும், கர்நாடகாவிடம் காவிரியை திறக்க அனுமதி பெறும் வகையில் ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

காவிரி போல காலா
இப்போது காலா விவகாரத்திலும், படத்தை திரையிட எந்த அடிப்படையில் தடை விதிக்கிறீர்கள் என கேட்காத மத்திய அரசு, தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரை, கர்நாடக முதல்வரிடம் கெஞ்சுமாறு கூறுவது மிகப்பெரிய அவமானம். 'பத்மாவத்' திரைப்படம் சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் என கூறி பாஜக ஆளும் பல மாநிலங்கள் தடை செய்தபோதும் சுப்ரீம் கோர்ட் அப்படி தடை செய்ய கூடாது என உத்தரவிட்டது.

அதிகாரத்தோடு கேட்கலாம்
ஆனால், கன்னட அமைப்பு கேட்டதால், தமிழ் படத்தை தடை செய்துள்ளார்கள், இதை சுப்ரீம் கோர்ட் உத்தரவோடு பொருத்தி, அதிகாரத்தோடு தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசோ வாய் மூடி இருப்பதோடு, அதன் அமைச்சர் ஒருவர், தமிழக எதிர்க்கட்சி தலைவரை, கர்நாடக முதல்வரிடம் கெஞ்ச சொல்கிறார் என்றால், தமிழர்கள் பற்றிய இவர்கள் எண்ணம் எப்படி உள்ளது?

கெஞ்சுவதா வேலை
கெஞ்சி பெறுவதல்ல உரிமை என்பதை அறியாதவன் இல்லை தமிழன். சட்டம் சாதகமாக இருந்தும், காவிரியில் கர்நாடகாவின் கரம் உயர்த்தி பிடிக்கப்பட்டுள்ளதை போலவே, காலா விவகாரத்திலும், பத்மாவத் தீர்ப்பு கண்முன் இருக்கும்போதும் கர்நாடகாவிடம் கெஞ்ச கோருகிறார் மத்திய அமைச்சர் ஒருவர். தமிழன் ஒவ்வொருவரிடமாக கெஞ்சிக் கொண்டே இருப்பதற்கு படைக்கப்பட்ட ஜீவன் என்பதை போல கையாளப்படுவதை பார்த்து, 'பச்சை தமிழரான' பொன்.ராதாகிருஷ்ணன் பொங்கியிருக்க வேண்டும். ஆனால் ஸ்டாலினை கிண்டல் செய்கிறேன் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராகத்தான் பேசியுள்ளார் என்றே கருத்து உருவாகியுள்ளது.

மத்திய அரசே செய்யலாம்
இப்போதும் காலம் தாழ்ந்துபோகவில்லை. மத்திய அரசு உடனடியாக கர்நாடக அரசிடம் கூறி, காலா படத்தை அங்கு ரிலீஸ் செய்ய வைக்க முடியும். பிரதமர் மோடியின் நண்பரான ரஜினிகாந்த்துக்கு செய்யும் உதவி என்று கூட தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டாலும் இதை பாஜக செய்திருக்கலாம். ஆனால், பந்தை அடுத்தவர் எல்லைக்குள் உருட்டி விட்டு நைசாக தப்பிக்க பார்க்கும் தந்திரம் தேவையற்றது.












Click it and Unblock the Notifications