அப்துல் கலாம் படித்த பள்ளிக்கே இந்த கதியா? மின் இணைப்பு துண்டித்ததால் ராமேஸ்வரம் மக்கள் வேதனை
மின்கட்டணம் செலுத்தாத காரணத்தினால் கலாம் படித்த பள்ளியில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ராமேஸ்வரம்: மின்கட்டணம் செலுத்தாததால் ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு மின் இணைப்பு 2வது முறையாக துண்டிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், ராமேஸ்வரத்திலுள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படித்தார். அந்த பள்ளி தற்போது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 200 மாணவ, மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர்.

குடியரசு தலைவராக அப்துல்கலாம் பதவியேற்றபின் ஒருமுறை இந்த பள்ளிக்கு வருகை தந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பள்ளியின் மின் இணைப்பினை பள்ளி நிர்வாகம் கட்டி வந்தது. அரசு உத்தரவுபடி பள்ளிக்கான மின்கட்டணத்தை மாவட்ட கல்வித்துறை மூலம் நேரடியாக கட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் பலமுறை எடுத்து கூறியும், மின்கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து நேற்று வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், பள்ளிதலைமை ஆசிரியரிடம் தகவல் அளித்துவிட்டு மின்இணைப்பை துண்டித்துவிட்டு சென்றனர். கல்வித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளின் நிர்வாகக் குளறுபடி காரணமாகவே மாவட்டம் முழுவதும் பல பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து பள்ளியின் மேலாண்மை குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் ஒருவார காலத்திற்குள் மின்கட்டணத்தை செலுத்திவிடுவதாக அளித்த உத்தரவாதத்தை தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் மின்இணைப்பு வழங்கப்பட்டது.
முன்னாள் குடியரசு தலைவர் பயின்ற பள்ளியிலேயே மின்கட்டணம் செலுத்தாமல் தமிழக அரசின் கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
