கர்நாடகத்திற்கு தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கம்... பயணிகள் கடும் அவதி!
ஒசூர்: காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக தமிழக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில், இரண்டு நாட்களாக ஒசூரிலிருந்து பெங்களூருக்கு தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
காவிரியில் இருந்து நீர் திறந்து விடுவது குறித்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 5ம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் கர்நாடகத்தில் வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் 20 நாட்களுக்கும் மேலாக பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் பேருந்துகள் ஒசூரிலிருந்து நேற்று முதல் பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. எனினும் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதால், தனியார் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதுவும் இன்று காலை வார விடுமுறை முடிந்து பெங்களூரு சென்ற பயணிகள் தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொற்றிக் கொண்டு அபாயகரமான பயணத்தை மேற்கொண்டனர்.
இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு, தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனைப் போன்றே, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு 21 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் முடங்கியுள்ளது. கர்நாடகத்தில் இருந்து ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த வழியாக லாரி போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications