வெள்ளத்தின் போது தனியார் கடைகளில் மட்டும் தடையே இல்லாமல் விற்ற ஆவின் பால்... எப்படி?
சென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கி திண்டாடியபோது, ஆவின் பால் பூத்துகளில் பால் கிடைக்கவில்லை. ஆனால், தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் கனமழை காரணமாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட அதிகளவு தண்ணீர் காரணமாகவும் வெள்ளத்தில் மூழ்கியது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தட்டுப்பாடு...
வெள்ளம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பால் பாக்கெட்டுகள், மெழுகுவர்த்திகள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிரடியாக உயர்ந்தது.

பால் கிடைக்கவில்லை...
அதிக விலை கொடுத்தும் பால் வாங்கத் தயாராக இருந்தபோதும், பல இடங்களில் பால் பாக்கெட்டுகள் கிடைக்கவில்லை. மருந்துக் கடைகளிலும் பால் பவுடர் இல்லை என எழுதியே வைத்திருந்தனர்.

பெரும் பாதிப்பு...
மின்சாரமும் இல்லாத காரணத்தால் வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகளும் கெட்டுப் போயின. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தான் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர்.

போக்குவரத்தே காரணம்...
சென்னையில் பல சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. இதனாலேயே ஆவின் பால் லாரி வரவில்லை என ஆவின் பால் பூத்களில் காரணம் சொல்லப்பட்டது.

இயல்பு நிலை திரும்பவில்லை...
வெள்ளம் ஓரளவிற்கு வடிந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கிய பின்னரும் கூட ஆவின் பால் பூத்களில் பால் கிடைக்கவில்லை. தொடர்ந்து வெள்ளமே காரணமாகச் சொல்லப்பட்டது.

கூடுதல் விலை...
ஆனால், இதற்கு நேர்மாறாக தனியார் கடைகளில் கூடுதல் விலையில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைத்தது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். 20 ரூபாய் பால் பாக்கெட், 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கள்ள ஆடுகள்...
இந்த அதிரடி விலைக்கான காரணத்தைக் கேட்டால், தாங்களும் மிக அதிக விலை கொடுத்தே இந்தப் பால் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர். அப்படியானால், தனியார் கடைகளுக்கு மட்டும் தனியாக ஆவின் பால் பாக்கெட்டுகளை சப்ளை செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விசாரணை தேவை...
ஏற்கனவே ஆவின் பால் முறைகேட்டில் அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் வைத்தியநாதன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இவன் பால் பூத்தில் வேலை பார்த்து வந்தவர். பின்னாளில் ஆவின் நிறுவனத்துக்கே லாரிகளை சப்ளை செய்யும் நிலைக்கு மளமளவென உயர்ந்தார். பாலில் கலப்படத்தில் ஆரம்பித்து ஆவினில் அப்பாயின்ட்மெண்ட் வாங்கித் தருவது வரை போனார்.
இந்த சூழ்நிலையில், வெள்ள பாதிப்பின் போது ஆவின் பால் பூத்துகளுக்கு முறையாக பால் பாக்கெட்டுகளை சப்ளை செய்யாமல், தனியார் கடைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்ற கள்ள ஆடுகள் யார் என்பதை அரசு விசாரிக்க வேண்டியது மிக மிக அவசியம். அட்லீஸ்ட் ஆவின் நிறுவனத்தின் விஜிலென்ஸ் விங் பிரிவாவது இதை விசாரிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications