கறுப்பு கொடி காட்ட திரண்ட பொது மக்கள்.. ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ
கறுப்பு கொடி காட்ட திரண்ட பொதுமக்கள்.. சைக்கிள் வழங்கும் விழாவை ரத்து செய்து ஓட்டம் பிடித்த அதிமுக எம்.எல்.ஏ.,
வேலூர்: நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்த கே.வி.குப்பம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ லோகநாதனை கண்டித்து அத் தொகுதியில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தது. ஆனால் ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுகவில் மற்றொரு அணி இயங்குவதால் அச்சமடைந்த சசிகலா தரப்பு, எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரிலுள்ள ஒரு ரிசார்ட்டில் அடைத்து வைத்தது.

சுமார் ஒரு வார காலம் கூவத்தூரில் பெண் எம்.எல்.ஏக்கள் உட்பட 124 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி மக்களிடம் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்தநிலையில், வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, தட்டப்பாறை ஊராட்சி அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா இன்று காலை நடக்க இருந்தது. இதில், கே.வி.குப்பம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., லோகநாதன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்குவார் என பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.
ஆனால் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக எம்.எல்..ஏ., லோகநாதன் வாக்களித்ததால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என தொகுதி மக்கள் அறிவித்திருந்தனர். இன்று காலை கறுப்பு கொடி போராட்டம் நடத்துவதற்காக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளி அருகே திரண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த, எம்.எல்.ஏ., லோகநாதன் இந்த விழாவில் பங்கேற்காமல் பாதி வழியிலேயே திரும்பி சென்று விட்டார். இதனால் விழா ரத்து செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications