ராகுல் வருகைக்கு எதிர்ப்பு.. கோவையில் கருப்புக்கொடி போராட்டம்: 91 பேர் கைது
கோவை: கோவையில் ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்திய நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 91 பேரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று தமிழகம் வருகை தந்தார். மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலினுடன் தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து கோவை வந்தார். கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழியுடன் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை பஸ் நிலையத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரின்போது தமிழர்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாதுகாக்கத் தவறியதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 15 பெண்கள் உள்ளிட்ட 91 பேர் பங்கேற்றனர். காங்கிரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் சென்னை ஆலந்தூரில் மாணவர் கூட்டமைப்பினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications
