வராத ராமசாமி.. கோபமாகப் போன கிருஷ்ணசாமி.. ஜாலியில் அதிமுக!
சென்னை: சட்டசபையில் நடந்த சிறப்புக் கூட்டத்தின்போது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்புச் செய்து போனபோது, அவரது கட்சியைச் சேர்ந்த இன்னொரு எம்.எல்.ஏ ராமசாமி மட்டும் இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.
ஒரு சாமி போனபோது, இன்னொரு சாமி அமைதி காத்தது குறித்து அதிமுக தரப்பில் புன்னகையுடன் கூடிய நமுட்டுச் சிரிப்பைக் காண முடிந்தது.
இதற்குக் காரணம், ராமசாமி, சீக்கிரமே அதிமுக பக்கம் தலை காட்டப் போவதாக கூறப்படுவதால்.

காமன்வெல்த்தை எதிர்த்து சிறப்புக் கூட்டம்
சமீபத்தில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்த்து தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடந்தது.

ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம்
இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா, ஒரு தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசினார். இதன் மீது விவாதமும் நடந்தது. கடைசியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பேச முயன்ற கிருஷ்ணசாமி.. தடை போட்ட தனபால்
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு டாக்டர் கிருஷ்ணசாமி சில கருத்துக்களைத் தெரிவித்தபோது அதை அனுமதிக்க மறுத்தார் சபாநாயகர் தனபால்.

கோபமான கிருஷ்ணசாமி
இதனால் கோபமடைந்த கிருஷ்ணசாமி கிட்டத்தட்ட போராட்டம் நடத்துவது போல பேச ஆரம்பித்தார். இதையடுத்து அவரை அவையிலிருந்து வெளியேற்றினர்.

அசையாத ராமசாமி
அப்போது புதிய தமிழகம் கட்சியின் இன்னொரு எம்.எல்.ஏவான நிலக்கோட்டை உறுப்பினர் ராமசாமி, சலனமே இல்லாமல் அவர் பாட்டுக்கு அமைதியாக இருந்தார். கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக பேசவோ, வெளியேறவோ இல்லை.

நானே கிருஷ்ணசாமி.. நானே ராமசாமி...
இதை செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியிடமே கேட்டபோது, அவர் விஜயகாந்த் பட டைட்டில் போல, நானே கிருஷ்ணசாமி... நானே ராமசாமி என்று சொல்லிச் சிரித்தது ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.

ஏன் ராமசாமி போகவி்ல்லை...
சிறிது காலமாகவே கிருஷ்ணசாமிக்கும், ராமசாமிக்கும் ஆகாதாம். பேசிக் கொள்வதும் கிடையாதாம். மேலும் அதிமுக தரப்பிலும் ராமசாமிக்கு நிறையவே தூண்டில் போட்டுள்ளனராம். அதில் ராமசாமி சிக்கி விட்டதாகவும் தெரிகிறது.

சீக்கிரமே சாயம் மாறும் ராமசாமி
இதனால் சீக்கிரமே அம்மாவைப் பார்த்து ராமசாமி தனது ஆதரவைத் தெரிவிக்கப் போவதாகவும் பேசிக் கொள்கிறார்கள். அதனால்தான் சட்டசபைக் கூட்டத்தின்போது அவர் சலனமே இல்லாமல் அமைதி காத்தாராம்.


Click it and Unblock the Notifications
