தேமுதிக- மநகூ தொகுதிகள் இழுபறிக்கு காரணம் மதிமுகவா? மறுக்கும் வைகோ
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த இறுதி உடன்பாடு இன்று மாலைக்குள் உறுதி செய்யப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்த உடன் தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. தேமுதிக 124 தொகுதிகளிலும், மநகூ 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டணியில் தமாகா இணையவே, தேமுதிக 20 தொகுதிகளை விட்டுக்கொடுத்தது. மக்கள் நலக்கூட்டணி 6 தொகுதிகளை விட்டுக்கொடுத்தது. 26 தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது. தேமுதிக 104 தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளிலும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தொகுதி பங்கீடு செய்யப்பட்டாலும் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில், கடந்த இரண்டு நாட்களாக இழுபறி ஏற்பட்டது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதியை முடிவு செய்ய முடியாமல் இழுபறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வைகோவின் பிடிவாதம்தான் தொகுதிகள் இழுபறிக்கு முழுக் காரணம்' எனக் குற்றச்சாட்டு எழுந்தது. கேட்ட தொகுதிகள் கிடைக்காத காரணத்தால் வைகோ கோபித்துக் கொண்டு போய் விட்டதாகவும் கூறப்பட்டது. ஒருவழியாக தொகுதிப்பங்கீடு முடிந்து தேமுதிக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. அதே நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் யார் யார் எந்தெந்த தொகுதிகள் என்பது இன்று மாலையில் அறிவிக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில், வேலுநாச்சியார் சரித்திர நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, வைகோ, தேமுதிக - தமாகா- மக்கள் நலக்கூட்டணியின் தொகுதி உடன்பாடு சுமூகமாக நடந்ததாகக் கூறினார். யாருக்கு எந்த தொகுதிகள் என்பது இன்று மாலைக்குள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் வாசனுக்கு 3 தொகுதிகள் விட்டு கொடுத்துளளதாகவும் கூறினார். கூட்டணிக்கு வாசனை அழைத்து வருவதற்கு அதிக முயறசி எடுத்துவந்தவன் நான் எனவும், உடல் நல குறைவு காரணமாக தான் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்க வில்லை என்றும் வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications