பழைய நோட்டுக்களை மாற்ற சென்னை ரிசர்வ் வங்கியில் குவிந்த கூட்டம்... 1 கி.மீ தொலைவுக்கு கியூ!
பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் முன்னர் சுமார் 1 கி.மீ தொலைவுக்கு மக்கள் வரிசையில் நின்றனர்.
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற சென்னை ரிசர்வ் வங்கியின் வாசல் முன்பு சுமார் 1 கி.மீ தொலைவிற்கு நீண்ட வரிசையில் முதியவர்களும், பெண்களும் காத்துக் கிடக்கின்றனர்.
கடந்த 10ம் தேதியில் இருந்து வங்கி வாசல்களில் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் கூட்டம் கூடிவருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் முன்பும் கூட்டம் அலைமோதி வருவது தவிர்க்க முடியவில்லை. கட்டுப்படுத்தவும் முடியவில்லை. மத்திய அரசின் 500 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் மக்கள் தங்களது வேலைகளை விட்டுவிட்டு வங்கி வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.

மேலும், ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், பல ஏடிஎம்கள் திறக்கப்படாமலேயே உள்ளன. இதனால் திறந்திருக்கும் சில ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து வருகின்றனர். இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையான இன்று சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சென்று பணத்தை மாற்ற பலரும் படைஎடுத்தனர். அளவுக்கதிகமான கூட்டம் ஏற்பட்டதால், மக்கள் கும்பலாக வங்கிக்குள் போகாமல் வரிசையில் நின்று பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அங்கிருந்த போலீசார் ஏற்பாடு செய்தனர். தங்களுடைய அன்றாட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட பணம் இல்லாத நிலையில் கடும் வெயில் என்றும் பாராமல் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
சுமார் 1 கி.மீட்டர் தூரத்திற்கு ரிசர்வ் வங்கியின் வாசல் முன், மக்கள் வரிசையில் நின்றதால், முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து வங்கிக்குள் நேராகச் சொல்ல போலீசார் அனுமதியளித்தனர்.
2000 ரூபாய் நோட்டுகளை வாங்கி சென்றால் அன்றாட செலவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், மக்கள் 50, 100, 10, 20 ஆகிய நோட்டுக்களையே கேட்டு வாங்கிச் சென்றனர்.
முன்னதாக, கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வங்கி மற்றும் அஞ்சலகங்களில், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்த நிலையில் மக்கள் கூட்டம் வங்கிகளின் வாசல்கள் அலைமோதி வருகிறது.












Click it and Unblock the Notifications