காந்தியின் கனவை தமிழகத்தில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி!
-ஆர் மணி
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்து கிட்டத் தட்ட ஐம்பது நாட்களாகி விட்டது. அவருக்குப் பதில் புதிய தலைவரை நியமிக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை திணறிக் கொண்டிருக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்து ஒரு மாதங் கழித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் இளங்கோவன். அப்போது நடந்ததை இவ்வாறு விவரிக்கிறார் இளங்கோவனுக்கு நெருக்கமான, பெயர் கூற விரும்பாத மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்:
"தமிழ் நாடு தேர்தல் முடிவுகள் பற்றி பேச்சு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் வெறும் 41 சீட்டுகள் திமுக விடம் வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டிருக்கக் கூடாது. கூடுதலாக குறைந்தது 20 இடங்களாவது வாங்கியிருக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி. ஆனால் இளங்கோவன் 41 சீட்டுக்களே தமிழ் நாட்டில் தற்போது காங்கிரஸ் இருக்கும் நிலைமையில் அதிகம் என்று பேசினார். இதனை ராகுல் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.

2011 ல் 63 இடங்கள் வாங்கி, வெறும் ஐந்து வென்றோம். தற்போது 41 வாங்கி எட்டு சீட்டுகள் வென்றிருக்கிறோம். மூன்றாவது பெரிய கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கிறோம். தமிழகத்தின் மற்ற பிரதான கட்சிகளான பாமக, தேமுதிக, இடதுசாரிகள், மதிமுக, பாஜக உள்ளிட்டவை முற்றிலுமாக துடைத்தெறியப் பட்டிருக்கின்றன. ஆகவே இந்த பின்னணியில் இது காங்கிரசுக்கு வெற்றிதான் என்றார் இளங்கோவன். ஆனால் தான் சொன்னதையே ராகுல் காந்தி சொல்லிக் கொண்டிருந்தார். அதனால்தான் வெளியில் வந்தவுடனேயே தன்னுடையை ராஜினாமா வை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இளங்கோவன் அனுப்பி விட்டார்," என்கிறார் அந்த தலைவர்.
இளங்கோவன் வெளியேறி விட்டார். ஆனால் புதிய தலைவரை நியமிக்க முடியாமல் 50 நாட்களாக காங்கிரஸ் தலைமை திண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே இதுபோன்று, இவ்வளவு காலம், 50 நாட்களாக, தலைவர் பதவி காலியாக இருந்தது இல்லை. அடுத்த தலைவராக பரீசீலிக்கப் படும் பெயர்களில் ப.சிதம்பரம், சு.திருநாவுக்கரசர், பீட்டர் அல்ஃபோன்ஸ், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் இருக்கின்றனர். இதில் திருநாவக்கரசரைத்தான் ராகுல் காந்தி அதிகம் விரும்புவதாக தெரிகிறது. ஆனால் இதற்கு பலமான எதிர்ப்பு கிளம்பிக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 39 காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் திருநாவுக்கரசருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர். இந்த கலகத்துக்கு பின்னணியில் இளங்கோவன் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. "திருநாவுக்கரசர் அடிப்படையில் அஇஅதிமுக வில் அரசியலை தொடங்கியவர். பின்னர் பாஜக வுக்குப் போய் விட்டு வந்தவர். அப்படிப்பட்டவரை நியமித்தால் நானும், எனது ஆதரவாளர்களும் அவருக்கு எந்த ஒத்துழைப்பையும் கொடுக்க மாட்டோம். கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பை தவிர்த்து வேறெந்த பொறுப்பிலும் தொடர மாட்டோம்,'' என்று வெளிப்படையாகவே சோனியா காந்தியிடம் இளங்கோவன் தெரிவித்து விட்டார் என்கிறார் அந்த காங்கிரஸ் தலைவர்.
ப.சிதம்பரத்துக்கு அந்தளவுக்கு, அதாவது திருநாவுக்கரசருக்கு இருக்கும் அளவுக்கு எதிர்ப்பு தற்போதைக்கு இல்லை. ஆனால் ஒருவேளை காங்கிரஸ் தலைவராக சிதம்பரம் நியமிக்கப்பட்டால் அடுத்த நிமிடமே மற்ற அனைத்து கோஷ்டிகளும் சிதம்பரத்துக்கு எதிராக கச்சைக் கட்டிக் கொண்டு நின்று விடுவார்கள். சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கு தான் தயார் என்றே கட்சித் தலைமைக்கு தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தி தான் இதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருப்பதாக சிதம்பரத்துக்கு நெருக்கமான ஒரு முன்னாள் எம்எல்ஏ கூறுகிறார்.
சோனியா காந்தியைப் பொறுத்த வரையில் அவர் இரண்டு விதமான மன நிலையில் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். மஹாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவைக்கு சிதம்பரத்தை எம்.பியாக்கி அனுப்பியது காங்கிரஸ். மஹாராஷ்டிராவின் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சுஷில் குமால் ஷிண்டே வுக்குத்தான் இந்த எம் பி பதவி கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றத்தில் பாஜக வை வலுவாக எதிர்கொள்ள தகுதியான, விவரம் அறிந்த ஒருவர் வேண்டும் என்பதால்தான் சிதம்பரம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். ஆகவே அப்படிப்பட்ட ஒருவரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக போடுவதில் பலனில்லை என்றே சோனியா காந்தி நினைப்பதாகவும் சொல்லப் படுகின்றது.
சிதம்பரத்தைப் பொறுத்த வரையில் தான் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவர் விரும்புகிறார் என்று கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால் இதற்கு சில கண்டிஷன்களை அவர் போடுகிறாராம். கட்சியை மாநில அளவில் நடத்துவதில் தனக்கு சில அடிப்படை சுதந்திரம் தேவை என்று சிதம்பரம் கேட்பதாகச் சொல்லப் படுகின்றது.
சிதம்பரம் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டத் தலைவராக நியமிக்கப் படுவதற்கு எதிர்பாராத இடத்திலிருந்து அவருக்கு ஆதரவு வந்து கொண்டிருக்கிறது. மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவராக இருக்கும் காங்கிரசின் குலாம் நபி ஆசாத் சிதம்பரத்தை எப்படியாவது தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமித்த விட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாராம். காரணம் ஆசாத்தின் பதவியை சிதம்பரம் குறி வைத்திருப்பதுதான்.
"மோடி அரசை கடுமையாக எதிர்கொள்ளத்தான் சிதம்பரத்தை மாநிலங்களவைக்கு சோனியா காந்தி கொண்டு வந்தார். குலாம் நபி ஆசாத் அடுத்தாண்டு உத்திரபிரதேசத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பொறுப்பாளாராக நியமிக்கப் பட்டிருக்கிறார். ஏற்கனவே ஆசாத்தின் பதவி ஆட்டங் கண்டு கொண்டிருக்கிறது. இதில் சிதம்பரம் மாநிலங்களவைக்கு வந்தது வேறு அவரை தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே எப்படியாவது சிதம்பரத்தை அந்த பதவியிலிருந்து அகற்றி விட ஆசாத் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இந்த முயற்சிக்கு மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் ஷர்மாவும் ஆசாத்துக்கு பக்க பலமாக இருக்கிறார். ஏனெனில் ஆசாத்தின் பதவிக்கு ஆனந்த் ஷர்மா வும் குறி வைத்திருப்பதுதான்,'' என்கிறார் காங்கிரஸ் விவகாரங்களை நீண்டகாலம் கவனித்து வரும் டில்லி பத்திரிகையாளர் ஒருவர்.
யாரை தலைவராக நியமித்தாலும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் வலுப்பெறப் போவது என்பது - கொச்சையாக சொன்னால் கரையேறப் போவது, உருப்படப் போவது - அனேமாக அறவே சாத்தியமற்றது என்பதுதான் கள யதார்த்தம். 1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஜி.கே. மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் தனியாக நின்று தன்மானம் காத்த போதும், பல தொகுதிகளில் டெபாசிட்டை பறி கொடுத்த போதும் வாங்கிய வாக்குகள் 26 சதவிகிதம். தற்போது இது 4 சதவிகிதமாக இருக்கிறது. இதுதான் ராஜீவ் காந்திக்கு பிந்தய காங்கிரஸ் தலைமையால் தமிழகத்தில் காங்கிரஸ் கண்ட வளர்ச்சி.
மாநில மக்களின் உணர்வுகளோடு எந்த புரிதலும் இல்லாமல் செயற்பட்டதன் விளைவை காங்கிரஸ் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 1967 ம் ஆண்டில் தமிழகத்தில் திமுக விடம் ஆட்சியை இழந்ததன் பொன் விழாவை அடுத்தாண்டு காங்கிரஸ் கொண்டாடவிருக்கிறது. தனி மனிதர்களுக்கு ஆயுள் இருப்பது போல நிறுவனங்களுக்கும் கூட ஆயுள் உண்டு என்று சொல்லுவார்கள். அனேகமாக தமிழகத்தில் காங்கிரசின ஆயுள் முடிந்தது என்றுதான் தோன்றுகிறது.
இதில் ராகுல் காந்தியின் மூர்க்கமான அணுகுமுறை இந்த போக்கை, அதாவது காங்கிரசை கல்லறைக்கு அனுப்பும் காரியத்தை கன கச்சிதமாக விரைவுப் படுத்திக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. 2014 ம் ஆண்டு தோல்விக்குப் பின்னர் தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து வெளியேறி விட்டனர். ஜெயந்தி நடராஜன், ஜி.கே. வாசன் உள்ளிட்டோரைச் சொல்லாம். தற்போது யாரை தலைவராக போட்டாலும், அடுத்த நிமிடமே மற்ற அனைத்து கோஷ்டிகளும் புதிய தலைவருக்கு எதிராக நிற்கும்.
ஆண்டு தோறும் வாக்காளர் பட்டியிலில் புதியதாக சேரும் லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்ப்பதற்கான எந்த செயற்திட்டமும் தற்போதய காங்கிரஸ் தலைமையிடம் இல்லை. 2004 - 2014 ம் ஆண்டுகளில் பத்தாண்டுகளில் தொடர்ச்சியாக நாட்டை ஆண்ட போதும் தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்கான எந்த காரியத்தையும் காங்கிரஸ் தலைமை செய்ய வில்லை. மாறாக ஊரை கொள்ளையடித்ததும், மாநில மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பெரும்பாலான தருணங்களில் செயற்பட்டதும் தான் மிச்சம். இவையெல்லாம் காங்கிரசுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த வாக்கு வங்கியையும் கபளீகரம் செய்து விட்டன.
இந்த பின்புலத்தில்தான் 50 நாட்களாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவர் இல்லாததை பார்க்க வேண்டும். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருக்கும் காங்கிரசின் நெடுங்கதைக்கு ராகுல் காந்தி அனேகமாக இறுதி அத்தியாயம் எழுதிக் கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது.
1947 ல் நாடு விடுதலை பெற்ற போது மஹாத்மா காந்தி சொன்னார்: "காங்கிரசை கலைத்து விடலாம்" என்று. அந்தக் கோணத்தில் பார்த்தால், அகில இந்திய அளவில் எப்படியோ தெரியாது... ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் காந்தியின் கனவை ராகுல் காந்தி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். சந்தேகமே வேண்டாம் ..... தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பொன் விழா ஆண்டில் காந்தியின் கனவு நிறைவேறுவது சராசரி காங்கிரஸ் தொண்டனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகவும் கூட இருக்கலாம்தான். மஹாத்மா வின் உண்மையான வாரிசு ராகுல் காந்தி என்றும் சராசரி காங்கிரஸ் தொண்டன் புளகாங்கிதம் அடைந்தும் மகிழலாம்தானே!












Click it and Unblock the Notifications