5 மணி நேரம் காத்திருந்து கட்டடத்தை வெற்றிகரமாக தகர்த்த போலீஸ்! #Moulivakkam
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 11 மாடி கட்டடம் இடிப்பதில் தாமதம் ஏற்பட்ட நி்லையில் போலீஸார் பிடிவாதமாக இருந்து கட்டடத்தை வெற்றிகரமாக தகர்த்துள்ளனர்.
மவுலிவாக்கம் பகுதியில் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட 11 மாடிக்கட்டடம் இன்று இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மழைக்கும் கட்டடத்தை இடிப்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, கன மழை பெய்தாலும் கட்டடம் தகர்க்கும் பணி நடக்கும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் கடுமையான மின்னல் மற்றும் இடி இடித்தால் மட்டும் தகர்க்கும் பணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் மாலை நேரத்தில் பெய்த பெருமழையின் போது மவுலிவாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வந்த 11 மாடிக்கட்டடம் இடிந்து தரை மட்டமானது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்களில் 61 பேர் அந்த இடத்திலேயே சமாதியாகினர். பலர் படுகாயமடைந்தனர். அந்த பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதே இடத்தில் கட்டப்பட்ட மற்றொரு கட்டடம் பாதுகாப்பற்ற கட்டடம் ஆக அறிவித்தது உயர்நீதிமன்றம். அந்த கட்டடத்தையும் இடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து மவுலிவாக்கத்தில் பாதுகாப்பற்ற 11 மாடி கட்டடத்தை தகர்ப்பதற்காக கட்டடத்தில் வெடிபொருட்கள் நிரப்பும் பணி இன்று காலை நிறைவு பெற்றது.
150க்கும் மேற்பட்ட தூண்களில் துளையிட்டு வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன. கட்டடத்தின் 5வது தளம் மற்றும் தரை தளங்களில் வெடி பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கட்டடத்தை தகர்க்க சுமார் 75 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டது. கட்டடம் நவீன தொழில்நுட்பம் கொண்டு தகர்க்கப்பட்டது. கட்டத்தை தகர்க்கும் போது ஏற்படும் புகை தூசியை கட்டுப்படுத்தவும், கட்டட இடிபாடுகள் வெளியில் வந்து விழாமல் தடுக்கவும் 10 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன.
முதலில் நண்பகல் 2.30 மணிக்கு தகர்க்கத் திட்டமிட்டனர். பின்னர் தாமதமாகி 3 மணி, 5 மணி என்று இழுத்து கடைசியில் 7 மணிக்குத்தான் தகர்க்கப்பட்டது. தாமதத்திற்குக் காரணம் வெடி மருந்து நிரப்பியதில் கோளாறு ஏற்பட்டதாகவும், அதை சரி செய்யும் பணியில் ஏற்பட்ட தாமதமே கட்டடம் இடிக்கப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. எவ்வளவு நேரமானாலும் திட்டமிட்டபடி இன்று கட்டடம் இடிக்கப்படுவது உறுதி என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். போலீஸாரும் உறுதியாக இருந்தனர். கடைசியில் வெற்றிகரமாக இடித்துத் தள்ளினர்.












Click it and Unblock the Notifications