மழை வெள்ளத்தோடு மக்கள் வெள்ளம்… தீபாவளி விற்பனையில் திணறிய தி. நகர்
சென்னை: கடுமையான மழை வெள்ளத்திற்கு இடையேயும், தியாகராய நகரில் திபாவளிக்கு பொருட்களை வாங்க குவிந்த மக்களால் ரங்கநாதன் தெரு கடைவீதியில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. மழை வெள்ளம் ஒருபுறம், மக்கள் வெள்ளம் மறுபுறம் என ஞாயிறன்று திணறிப்போனது சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம் கடைவீதிகள்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே இருப்பதால் தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலைகளில் உள்ள கடைகளில் ஆடை, அபரணங்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஞாயிறுக்கிழமை என்பதால் காலைமுதலே மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. ஆன்லைனில் பொருட்களை விற்றாலும் நேரடியாக பொருட்களை பார்த்து பார்த்து வாங்கியது போலாகுமா? எனவே பாண்டிபஜார் பகுதிகளும் பொருட்களை வாங்க குவியத்தொடங்கினர் மக்கள் இதனால் தீபாவளி விற்பனை களைகட்டியது.

குவிந்த கூட்டம்
வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால் காலைமுதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருட்டிக்கொண்டு வந்தது.எதைப்பற்றியும் கவலைப்படாத மக்கள், கூட்டம் கூட்டமாக ரயில்களிலும் பேருந்துகளிலும் தி.நகருக்கு திரண்டு வந்தனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரிக்கவே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கொட்டிய மழை
நண்பகல் 12 மணியளவில் திடீரென்று வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது போல கொட்டியது. இதனால் கூட்டம் கூட்டமாக சாலையோர கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த மக்கள், அருகில் இருந்த பெரிய கடைகளுக்குள் நுழைந்தனர்.

வெள்ளம் சூழ்ந்த தி.நகர்
2 மணிவரை கொட்டித்தீர்த்த கனழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குடைகளை பிடித்துக்கொண்டு, முழங்கால் அளவு ஓடிய நீரில் நடந்து வந்து சிலர் கடைகளில் பொருட்களை வாங்க வந்தனர்.

திணறிய தி.நகர்
மழை வெள்ளம் ஒரு பக்கம், மக்கள் வெள்ளம் மறுபக்கம் என தி.நகர் திணறித்தான் போனது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த நின்றிருந்த போலீசார், செய்வதறியாது திகைத்தனர். கயிறுகளை கட்டி கட்டுப்படுத்தினர். ஒலிபெருக்கிகளில் போலீசார் எச்சரிக்கை விடுத்தவாரே இருந்தனர்.

கண்காணிப்பு கோபுரம்
பாண்டிபஜார், மாம்பலம், தி.நகரில் 70 ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். மேலும், மாம்பலம் ரயில் நிலையம் அருகில், ரங்கநாதன் தெரு, மாம்பலம் பேருந்து நிறுத்தம், போத்தீஸ், சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மேல் நின்று தொலை நோக்கி கருவி மூலம் போலீசார் சந்தேக நபர்களை கண்காணித்தனர்.

கடைக்குள் வெள்ளம்
மழை வெள்ளம் ஓரளவு வடியத்தொடங்கிய உடன், மீண்டும் சாரை, சாரையாக மக்கள் சாலைகளில் நடமாடத் தொடங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் போக்குவரத்து போலீசாரின் பாடுதான் படு திண்டாட்டமதாகத்தான் போனது. பைகள், நகைகள், குழந்தைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிமிடத்திற்கு நிமிடம் போலீசார் அறிவுறுத்திக்கொண்டே இருந்தனர்.

ஜொலி ஜொலிக்கும் புடவைகள்
பிரபல ஜவுளிக் கடைகளுக்குள் பெண்கள் உற்சாகமாக பட்டுப்புடவைகளை வாங்க, ஆர்வம் காட்டினர். 3000 முதல் 35000 வரை புடவைகளை எடுத்துப்போட பெண்கள் வாங்கிய தீபாவளி புடவைகள் கணவர்களின் பர்ஸ்களை பதம் பார்த்தது.

காத்திருந்த கணவர்கள்
பெண்கள் சாவகாசமாக புடவைகளையும், நகைகளையும் வாங்கி குவிக்க, குழந்தைகளுடன், கணவர்கள் கடைகளில் காத்திருந்தனர். மறுபடியும் மழை வர்ற மாதிரி இருக்கு, மழையில மாட்டிக்காம விடியரதுக்குள்ள வீட்டுக்குப் போனா சரிதான் என்று பரிதாபமாக சொன்ன கணவர்களை சட்டை செய்யாமல் பொருட்களை வாங்கினர் பெண்கள்.

திணறிய தி.நகர்
தீபாவளி பண்டிகை விற்பனை களை கட்டினாலும் மழையினால் சாலையோர சில்லறை விற்பனையாளர்களின் பாடுதான் படு திண்டாட்டமாக போனது, மழை வெள்ளம் ஒரு பக்கம், மக்கள் வெள்ளம் மறுபக்கம் என தி.நகர், புரசைவாக்கம் கடைவீதிகள் மொத்தத்தில் நேற்று திணறித்தான் போனது.












Click it and Unblock the Notifications