இடியோடு மழை பெய்யும்… குடையோட போங்க! சொல்வது ரமணன்
சென்னை: லட்சத்தீவு - குமரி கடல் இடையே வளிமண்ட மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மழை பெய்யும். சென்னையில் ஓரிரு நேரங்களில் மழை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்னி வெயிலை தணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை டெல்டா மாவட்டங்களில் இன்று 4வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்தது.
தஞ்சாவூரில் இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை பெய்தது. மேலும் கும்பகோணம், பாபநாசம், பூதலூர், திருவையாறு உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், குடவாசல், நன்னிலம், நீடாமங்கலம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் நேற்று மழை பெய்தது. திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 9.3 செ.மீ மழை பெய்துள்ளது.
நாகை மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழை குறுவை சாகுபடி விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், கீழையூர், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. இதில் திருமருகல் பகுதியில் சுமார் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிர் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் முழுவதும் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இந்த மழை தொடர்ந்தால் பருத்தி பயிர் பழுத்து முழுஅளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
சீர்காழி பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை கனமழை பெய்தது. இந்த மழை இரவு 12 மணிவரை நீடித்தது. இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்று காலையும் மழை பெய்து வருகிறது.

விவசாயிகள் கவலை
இந்த மழை கால்நடைகள் மேய்ச்சலுக்கும், குறுவை விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சீர்காழி பகுதியில் தொடர்மழை காரணமாக 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட தர்பூசணி, 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட பருத்தி பயிறும் பாதிக்கப்பட்டுள்ளது.

உப்பு உற்பத்தி பாதிப்பு
இந்த மழையால் அதிராம்பட்டினம், தரங்கம்பாடி, வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் உப்பளங்களில் தேங்கி நிற்பதால் உப்பு உற்பத்தி பாதித்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இடிந்து விழுந்த வீடு
வேதாரண்யம் அருகே உள்ள கரியாபட்டினம் தெற்கு பகுதியில் வசிப்பவர் ராமாமிர்தம். இவர் வீட்டில் தனது குடும்பத்தினருடன் படுத்து தூங்கியபோது இன்று காலை 5 மணி அளவில் அவரது வீட்டின் பின்பகுதி உடைந்து விழுந்தது. அதன் சத்தத்தை கேட்டு வெளியே ஓடி வந்துவிட்டதால் அவரது குடும்பத்தினர் காயமின்றி தப்பினர். அவர்கள் வீட்டில் வளர்த்த ஒரு மாடு காயமடைந்தது.

ஆறுகளில் வெள்ளம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தேனி உள்பட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.

இடியோடு மழை
லட்சத்தீவு-குமரி கடல் இடையே வளிமண்ட மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மழை பெய்யும். சென்னையில் ஓரிரு நேரங்களில் மழை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் அதிகமழை
நேற்று அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் காமாட்சி புரத்தில் 22 செ.மீ. மழை பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டம் முணலூரில் 17 செ.மீ., ஒட்டன்சத்திரத்தில் 16 செ.மீ, திருத்துறைபூண்டி, சூளூர், கோவை பீளமேடு வேடசந்தூரில் 9 செ.மீ., சீர்காழி, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு, நாகை மாவட்டத்தில் 7 செ.மீட்டர் மழையும், உடுமலைபேட்டை, தருமபுரி, மயிலாடுதுறை, காங்கேயத்தில் 6 செ.மீ மழையும், தாராபுரம், காரைக்காலில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications