போக்குவரத்து துண்டிப்பு: தாம்பரம் பேருந்து, ரயில் நிலையகளில் விடிய விடிய பயணிகள் தவிப்பு
சென்னை: 40 மணிநேரம் விடாமல் கொட்டிய கனமழையால், சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வெள்ளநீர் ஓடியது. இதன் காரணமாக செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. தாம்பரம் ரயில்நிலையத்தில் தேங்கிய மழைநீரால் மின்சார ரயில் சேவையும் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விடிய விடிய தாம்பரம் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் காத்திருந்தனர்.
செங்கல்பட்டு-தாம்பரம் இடையே உள்ள ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், நின்னக்கரை ஏரிகள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டதால் சிங்கபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர் சாலை செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் துண்டிக்கப்பட்டது.

போக்குவரத்து நிறுத்தம்
செங்கல்பட்டு - தாம்பரம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் ஆறாக ஓடி சாலை அரிக்கப்பட்டு ஆங்காங்கே துண்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஏராளமான பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

முடங்கிய போக்குவரத்து
சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் செங்கல்பட்டு உள்ளேயோ அல்லது புறவழிச்சாலை வழியாகவோ கூட செல்ல முடியாத அளவுக்கு ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதையில் இயக்கம்
இதையடுத்து சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் காஞ்சிபுரம் வழியாகவும், மேலும் தாம்பரம், படப்பை, வாலாஜாபாத் வழியாக வந்து செங்கல்பட்டு புறவழிச்சாலை வழியாக செல்கின்றன.

பயணிகள் தவிப்பு
இதே போன்று செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு செல்பவர்கள் வாலாஜாபாத், படப்பை, தாம்பரம் வழியாக செல்லவேண்டும். மேலும் செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம், உத்தரமேரூர், கல்பாக்கம், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், புதுச்சேரி, சித்தாமூர், சூணாம்பேடு, செய்யூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச்செல்லும் பேருந்துகள் வழித்தடம் மாற்றப்பட்டு செங்கல்பட்டு-காஞ்சிபுரம் நெடுஞ்சாலை வழியாக சுமார் 5 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்கின்றன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

முற்றிலும் முடங்கியது
பி.வி. களத்தூர் ரயில்வே தண்டவாளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒத்திவாக்கம் வரை மட்டும் பேருந்து இயக்கப்படுகிறது. அதைத்தாண்டி செல்லும் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருப்போரூர் பகுதியில் வெங்கூர், முள்ளிப்பாக்கம் பகுதியில் பாலம் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றார். செங்கல்பட்டில் 90 சதவீதம் கடைகள் மழை காரணமாக அடைக்கப்பட்டிருந்தன.

மூழ்கிய தண்டவாளங்கள்
தாம்பரம் ரயில்நிலையத்தில் நேற்று காலையிலேயே வெள்ளநீர் தேங்கியதால் ரயில் தண்டவாளங்கள் மூழ்கின. சிக்னல்களும் செயலிழந்தன. எனவே, மின்சார ரயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. செங்கல்பட்டு ரயில்களும் தாம்பரத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டன. பின்னர் மின்சார ரயில் போக்குவரத்து பல்லாவரம்-தாம்பரம் இடையே நிறுத்தப்பட்டது.

முழுமையாக ரத்து
தொடர்ந்து பல்லாவரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலைமை நேற்று இரவிலும் தொடர்ந்தது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயும் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர் செல்லும் ரயில்கள் நேற்று முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
|
2 லட்சம் பயணிகள் தவிப்பு
குறிப்பாக தாம்பரம் ரயில்நிலையத்தில் தேங்கிய மழைநீரால் தாம்பரம்-பல்லாவரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 2 லட்சம் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பயணிகள் விடிய விடிய தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.


Click it and Unblock the Notifications
