பிற கைதிகளிடம் பேசவிடாமல் தனிமை சிறையில் கொடுமை: வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்
வேலூர்: பிற கைதிகளிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்துவதாகக் கூறி, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தண்டனைக் கைதி நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நேற்றுமுதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து சிறைத் துறை கண்காணிப்பாளரிடம் நளினி அண்மையில் அளித்த மனு:

வேலூர் பெண்கள் சிறையில் பிற கைதிகள் என்னிடம் பேசுவதற்கு சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது. சிறைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் இல்லாததால், ஆழ்துளைக் கிணற்று நீரையே சிறைக் கைதிகள் அனைவரும் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதற்காக நான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை முதல் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடக் கோரி சிறை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வேலூர் மத்தியச் சிறையில் உள்ள நளினி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சிறைத் துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், நளினிக்கும் சில நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சிறைத் துறை நிர்வாகம் கடந்த இரு தினங்களுக்கு முன் செய்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து சிறைத் துறை நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறை நிர்வாகத்தை சங்கடத்தில் ஆழ்த்துகிறார். அவரிடம் பிற பெண் கைதிகள் பேசக்கூடாது என எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று தெரிவித்தது.












Click it and Unblock the Notifications