இது தமிழக மீனவர்களின் சாபக்கேடு.. மத்திய அரசு மீது ராமதாஸ் காட்டம்
சென்னை: இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களைத் தாக்குதல்,கைது செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு இலங்கை அரசு சவால் விடுத்து வருகிறது. இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி கோரும் போதெல்லாம் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது அதன் இறையாண்மையை பாதிக்கும் செயல் என்று மத்திய அரசு கூறிவந்தது. இப்போது தமிழக மீனவர்களை கைது செய்வதன் மூலம் இந்திய இறையாண்மை மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது தான் தமிழக மீனவர்களின் சாபக்கேடு என்று காட்டமாக கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 13 மீனவர்களை கைது செய்துள்ளனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்கள் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்த போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட இரு நிகழ்வுகளுமே இந்திய கடல் எல்லைக்குள் தான் நடைபெற்றுள்ளன. மீனவர்களை கைது செய்த சிங்களப்படையினர் அவர்களுக்குச் சொந்தமான 7 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வங்கக்கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்குவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் மீனவர்களின் படகு சேதமடைந்தது. படகில் இருந்த 6 மீனவர்களும் நூலிழையில் உயிர் தப்பினர்.
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசு அவர்களை 90 நாட்கள் வரை சிறையில் அடைத்து அவர்களின் பிழைப்பைக் கெடுப்பதுடன், படகுகளையும் நாட்டுடைமையாக்கி வாழ்வாதாரத்தை பறிக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 35 படகுகள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையான 200-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித் தொழிலை செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், இனி மீனவர்களை கைது செய்யக்கூடாது என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீசிடம் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தினார். ஆனால் பிரதமரின் கருத்தை இலங்கை அரசு சிறிதும் மதிக்கவில்லை. அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் தமிழக மீனவர்களின் நலனுக்காக துரும்பைக் கூட கிள்ளிப் போட வில்லை.
இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களைத் தாக்குதல்,கைது செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு இலங்கை அரசு சவால் விடுத்து வருகிறது. இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி கோரும் போதெல்லாம் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது அதன் இறையாண்மையை பாதிக்கும் செயல் என்று மத்திய அரசு கூறிவந்தது. இப்போது தமிழக மீனவர்களை கைது செய்வதன் மூலம் இந்திய இறையாண்மை மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது தான் தமிழக மீனவர்களின் சாபக்கேடு.
இப்போது கைது செய்யப்பட்ட 30 மீனவர்களையும், ஏற்கனவே இலங்கை சிறையில் வாடும் 75 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படி இலங்கையிடம் இந்தியா கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்து வரும் இலங்கை அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என்று சாடியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications