அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல் ரத்து.. ராமதாஸ் வரவேற்பு !
சென்னை: அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் 13ஆம் தேதி நடைபெறவிருந்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆணையம் ரத்து செய்திருப்பது வரவேற்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருந்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆணையம் ரத்து செய்திருக்கிறது. இரு தொகுதிகளிலும் பணம் வெள்ளமாக பாய்ந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுகவும், திமுகவும் ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் வினியோகித்ததாக பா.ம.க. தொடர்ந்து குற்றஞ்சாற்றி வந்தது. அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதை நான் பலமுறை சுட்டிக்காட்டினேன். அத்தொகுதி பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் முதலில் மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதைத் தொடர்ந்து இதே குற்றச்சாற்றின் அடிப்படையில் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இரு தொகுதிகளிலும் ஜுன் 13 ஆம் தேதிக்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை போதுமானதல்ல என்றும், இரு தொகுதிகளின் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து மீதமுள்ள வேட்பாளர்களைக் கொண்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வந்தது.
இந்த விவகாரத்தில் தமிழக ஆளுனர் தேவையின்றி தலையிட்டு, இரு தொகுதிகளின் தேர்தலை இம்மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்த போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் இரு தொகுதிகளின் தேர்தலை ஆணையம் ரத்து செய்திருப்பது தாமதித்து எடுக்கப்பட்டாலும் சரியான நடவடிக்கை ஆகும். இதுபற்றி தேர்தல் ஆணையம் பிறப்பித்த அறிவிக்கையில், இரு தொகுதிகளிலும் பணம் வினியோகிக்கப்பட்டது தொடர்பாக மேலும் பல ஆதாரங்களை ஆணையம் வெளியிட்டுள்ளது.
‘‘அரவக்குறிச்சி தொகுதியில் மே 14ஆம் தேதிக்கு முன்பாக அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 2000 ரூபாயும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 1000 ரூபாயும் வழங்கினார்கள். அதன்பின் 14 ஆம் தேதி இரு வேட்பாளர்களும் தலா ரூ.3000 வழங்கினார்கள் என்று பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் புகார் அளித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் அளித்தார். இப்புகார் உண்மை தான் என்பதை விசாரணையில் உறுதி செய்ய முடிகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் ரூ.8.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இரு தொகுதிகளிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பிறகும்,18ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.5.72 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் ஒரே வேட்பாளர் ரூ.6 கோடி பணம் வினியோகம் செய்துள்ளார். கடுமையான கண்காணிப்புக்குப் பிறகும் தஞ்சாவூரில் வினியோகிக்கப்பட்ட ரூ.21 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது'' என்று தேர்தல் ஆணையம் விரக்தி கலந்த வேதனையுடன் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பகுதியில் வசிக்கும் ஈசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மின்னஞ்சல் மூலம் அளித்த புகாரில், அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள அவரது பெற்றோரை கட்டாயப்படுத்தி ஓட்டுக்கு ரூ.2000 வரை கொடுத்தனர் என்றும், அதை வாங்க மறுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தி பணத்தை திணித்து விட்டு சென்றனர் என்றும் கூறப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 2 தொகுதிகளிலும் எந்த அளவுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் இருக்க முடியாது.
மேலும், இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தான் பணம் வினியோகித்தனர் என்பதையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இத்தகைய சூழலில் இரு தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைப்பது மட்டுமே போதுமானதல்ல. இந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் போது இரு கட்சிகளின் வேட்பாளர்கள் மீண்டும் பண வினியோகத்தில் ஈடுபடுவார்கள்.
அதை தேர்தல் ஆணையத்தால் நிச்சயமாக தடுக்க முடியாது. எனவே, இந்த இரு தொகுதிகளைப் பொறுத்தவரை அதிமுக, திமுகவை தகுதி நீக்கம் செய்வது தான் ஒரே தீர்வாகும். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 171(பி) பிரிவின்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இரு தொகுதிகளின் தேர்தல் அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் போது புதிதாக வேட்பு மணுத்தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். அப்போது, அதிமுக, திமுக சார்பில் எவரும் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது.
அதிமுக, திமுக தவிர இப்போது களத்திலுள்ள பிற வேட்பாளர்கள் மட்டுமே மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பணம் வினியோகிக்கப்பட்டது குறித்த ஊடக செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் பிடிபட்ட பணம் பெருங்கடலின் ஒரு துளியாக மட்டுமே இருக்கும் என்று தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் நடைபெற்ற பண வினியோகம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிப்பதுடன் பணபலத்தின் உதவியுடன் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications