தமிழ்நாட்டிலேயே திருவள்ளுவர் சிலைக்கு அனுமதியில்லையா?… ராமதாஸ், வைகோ கண்டனம்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு சொந்தமான பூங்காவில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபும் மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பூங்கா ஒன்று உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த பூங்காவிற்கு திருவள்ளுவர் பூங்கா என்று பேரூராட்சி நிர்வாகம் பெயர் சூட்டியுள்ளது.
இந்நிலையில், திருவள்ளுவர் பெயர் கொண்ட பூங்காவில் திருவள்ளுவருக்கு ஒரு சிலையை வைக்க தமிழ் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு 2014ம் ஆண்டு பேரூராட்சி அனுமதியும் அளித்து தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீர்மானத்தை அரசு ஒப்புதலுக்கு பேரூராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மீண்டும் பேரூராட்சி நிர்வாகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, எந்நேரமும் திருவள்ளுவர் சிலை திறப்பதற்கான அனுமதி கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் தமிழ் சங்கத்தினர், பூங்காவில் திருவள்ளுவர் சிலையையும் அதனை வைப்பதற்கான பீடத்தையும் ஏற்கனவே அமைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு செங்கல்பட்டு கோட்டாட்சியரும், மாமல்லபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினரும் ஜெசிபி இயந்திரம் கொண்டு திருவள்ளுவர் பீடத்தை உடைத்து அங்கு வைத்திருந்த சிலையையும் தூக்கிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
காவல்துறையினரின் இந்த செயலுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்த உலகுக்கு அளித்த திருவள்ளுவருக்கு சிலை அமைக்க தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதை விட வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது. தமிழகத்திலேயே திருவள்ளுவருக்கு சிலை அமைக்க அனுமதி மறுக்கப் பட்டால், அதன்பின் உலகில் வேறு எங்கும் திருவள்ளுவர் சிலை அமைக்க முடியாமல் போய்விடும். எனவே, இந்த விஷயத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக தலையிட்டு, திருப்போரூர் பூங்காவில் திருவள்ளுவர் சிலையை நிறுவி திறப்பு விழா நடத்த ஆணையிட வேண்டும்.'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோன்று இந்த சம்பவம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதி பாடியவாறு, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாட்டில், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு அவமதிப்பு ஏற்படுத்திய ஜெயலலிதா அரசின் இத்தகைய செயல் மன்னிக்க முடியாத கடும் கண்டனத்திற்கு உரியதாகும்" என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் இருந்து கங்கைக் கரையில் உள்ள பூங்காவில் வைக்க எடுத்துச் செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலையை அங்கு வைக்க மதவெறி கும்பல் எதிர்ப்பு தெரிவித்த போது தமிழ்நாடே கொந்தளித்தது. ஆனால் தமிழ்நாட்டிலேயே திருவள்ளுவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று இரு அரசியல் கட்சித் தலைவர்களுமே கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications