25 சவரன் தங்க நகைகள்.. விஏஓ நொந்துட்டாரு.. ராணிப்பேட்டையில் சத்தமின்றி சம்பவம்! யாரு ஜெயில் வார்டன்?
ராணிப்பேட்டை: நெமிலியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு 25 சவரன் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் வேலூர் மத்திய சிறைக்காவலர்கள் 2 பேர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை சேர்ந்தவர் மோகன்ராஜ்.. 73 வயதாகிறது.. இவர் ஓய்வு பெற்ற விஏஓ ஆவார்.. மனைவியுடன் தற்போது தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள். 2 மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் 4 பேருக்குமே கல்யாணமாகி தனித்தனியாக வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

மோகன்ராஜ் டிசம்பர் மாத துவக்கத்தில், தன்னுடைய கண் ஆபரேஷனுக்காக சென்னை சென்று, உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்... இந்நிலையில் கடந்த 4ம் தேதி காலை மோகன்ராஜின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள், அவருக்கு போன் செய்து, வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக தகவல் தந்துள்ளனர்.
வெள்ளி நகைகள்: இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் உடனடியாக நெமிலிக்கு கிளம்பி வந்தார்.. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள், ஒன்றே கால் கிலோ வெள்ளி நகைகள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ந்தார். இதுகுறித்து நெமிலி போலீசில் மோகன்ராஜ் புகார் தந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும்போது, அடுத்த சில நாளிலேயே பனப்பாக்கம் அடுத்த ரெட்டிவலம் கற்பகாம்பாள் நகரில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்தது.. இங்கு வசித்து வரும் சுரேஷ் என்கிற வெங்காய வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 11 சவரன் நகைகள், 416 கிராம் வெள்ளி நகைகளை யாரோ திருடிவிட்டனர். இதனால், சுரேஷூம், நெமிலி போலீசில் புகார் தந்தார்.
வழிப்பறிகள்: இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசாரும், மர்ம ஆசாமிகளை தேடிவந்தனர். ஆனால், அதற்குள் அதே பகுதியில் பல்வேறு வழிப்பறிகள் நடந்தன.. பனப்பாக்கம், சேந்தமங்கலம், பருவமேடு, பள்ளூர் உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்து நடந்த வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் கடும் பீதியும், கலக்கமும் அடைந்தனர்.. இதனால் இந்த விவகாரம் ராணிப்பேட்டை எஸ்பி கிரண்ஸ்ருதி வரை சென்றது.
ராணிப்பேட்டை எஸ்பி பிறப்பித்த அதிரடி உத்தரவின் பேரில், நெமிலி இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, எஸ்ஐ லோகேஷ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக போலீசார் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.
காவேரிப்பாக்கம்: இந்நிலையில், நேற்று மேற்கண்ட 2 திருட்டு வழக்குகள் தொடர்பாக, குற்றவாளி ஒருவரை சென்னையில் தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் சூர்யா (29) என்பதும், காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது... இவர்தான் விஏஓ, வெங்காய வியாபாரி சுரேஷ் இருவரின் வீடுகளிலும் நகைகளை திருடினாராம்.
தான் திருடிய நகைகளை, ஏற்கனவே குற்றச்சம்பவங்களில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, நண்பர்களான சிறைக்காவலர்கள் பாஸ்கரன்(29), அப்துல்சலாம்(28) ஆகியோரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் வாக்குமூலம் தந்தார்.
விசாரணை: இதையடுத்து சிறைக்காவலர்கள் பாஸ்கரன், அப்துல்சலாமை பிடித்து நெமிலி போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ஏற்கனவே சிறை நிர்வாகத்தால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அத்துடன், அவர்களிடம் சூர்யா கொடுத்து வைத்த நகைகளை திருவண்ணாமலையில் விற்றுவிட்டதும் அம்பலமானது.
இதையடுத்து விஏஓ வீட்டில் திருடப்பட்ட 15 சவரன் நகைகள், ஒன்றேகால் கிலோ வெள்ளி நகைகள், வியாபாரி வீட்டில் திருடிய 11 சவரன் நகைகள், 416 கிராம் வெள்ளி நகைகளில் 13.7 சவரன் தங்க நகைகளும், 1.666 கிலோ வெள்ளி நகைகளும் கைப்பற்றப்பட்டன.
ஜெயிலில் சிறைக்காவலர்கள்: திருவண்ணாமலையில் விற்பனை செய்யப்பட்ட மீதி தங்க நகைகளின் பணத்தில் செலவிட்டது போக, கையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தையும் போலீசார் கைப்பற்றினர். 2 சிறைக்காவலர்கள் + கொள்ளையன் என 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications