உள்ளாட்சித் தேர்தல்… திமுகவுடன் பேச காங்கிரஸ் குழுக்கள் அமைப்பு... திருநாவுக்கரசர் அறிவிப்பு
சென்னை: மாவட்ட அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள பகுதிகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதை தொடர்ந்து மாவட்ட அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள பகுதிகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனை ஆளும் பாஜக அரசு செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடக அரசு இதனைச் செய்ய மத்திய அரசுநிர்பந்தம் செய்ய வேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருந்ததோ அந்த கட்சிகளே கூட்டணியில் தொடர்கின்றன என்றும், திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளுடன் இடங்களை பகிர்ந்து கொண்டு விவரங்களை அனுப்ப வேண்டும் என்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள நாங்களே இன்னும் இடங்கள் ஒதுக்கீடு பற்றி பேசி முடிக்கவில்லை. அதற்குள் மேலும் வரக்கூடிய கட்சிகள் பற்றி ஏன் பேச வேண்டும்?
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள், இளைஞரணி, மகளிரணி, கட்சி செயற்குழு, மாணவரணி கூட்டம் நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனு பெறுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
காவிரி பிரச்சனையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைப்பது மாநில அரசு எடுக்க வேண்டிய முடிவு. எப்போது தேர்தலை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக உள்ளோம் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
