பள்ளிக் குழந்தைகள் கடத்தல்! அல்லோலப்பட்ட செங்கல்பட்டு! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..கண்ணை மறைத்த பாசம்..!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பள்ளிக்கு சென்ற மாணவர்கள் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே இருவரும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணவனை பிரிந்து வசித்து தாய் ஆர்த்தி தனது 'நண்பருடன்' சேர்ந்து தனது குழந்தைகளை அழைத்துச் சென்றதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலன் (31). இவருக்கு திருமணமாகி ஆர்த்தி (30). என்கிற மனைவியும், ரக்சிதா (11), நித்தின் (7) என்கிற மகனும் உள்ளனர்.

வேலன் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில், ஆர்த்தி செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் வேலனின் அரவணைப்பில் குழந்தைகள் இருவரும் இருந்த நிலையில் ஒழலூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் சிறார்கள் இருவரும் நேற்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற நிலையில், மதிய உணவு இடைவேளையின் போது, காரில் வந்த ஒரு ஆண் ஒரு பெண் என இருவர் பள்ளியின் தலைமை ஆசிரியர் எழிலரசியிடம் சென்று தான் வேலனின் தங்கை என்றும், நீண்ட நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்துள்ளதால் குழந்தைகளை காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குழந்தைகளை பார்ப்பதற்கு அனுமதித்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரத்தில் அங்கிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் சேர்ந்து வேலனின் குழந்தைகளான ரக்சிதா, நித்தின் ஆகிய இருவரையும் காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, பள்ளிக்கு வந்த காவல்துறையினர் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளிக்கு வந்த வேலனின் உறவினர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, வேலனின் மனைவி ஆர்த்தி தனது குழந்தைகளை அழைத்துச் சென்றாரா? அல்லது வேறு யாராவது கடத்திச் சென்றார்களா என தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கார் வந்து சென்றதாக கூறப்படும் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் காரின் அடையாளங்களை வைத்து விசாரித்த போது கார் ராணிப்பேட்டை நோக்கி சென்றது தெரியவந்தது. பண பிரச்சினை காரணமாக பனைய கைதிகள் போல் குழந்தைகள் கடத்துச் செல்லப்பட்டார்களா? அல்லது வேலனின் மனைவி தனது குழந்தைகளை அழைத்துச் சென்றாரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வேலனின் மனைவியான ஆர்த்தி தனது ஆண் நண்பருடன் பள்ளிக்கு வந்ததும் அதற்குப் பிறகு அந்த குழந்தைகளை பேசியபடி காரில் ஏற்றி அழைத்துச் சென்ற காட்சிகள் வெளியானது. இதை அடுத்து ஆர்த்தி தனது குழந்தைகளை அழைத்துச் சென்றிருப்பதை உறுதி செய்த போலீசார் செல்போன் சிக்னலை வைத்து கார் ராணிப்பேட்டை அருகே சென்று கொண்டிருப்பதை உறுதி செய்தனர். இதை அடுத்து அந்த ஊர் போலீசார் உதவியுடன் காரை மடக்கிய போலீசார் அவர்களை செங்கல்பட்டு அழைத்து வந்தனர்.
தற்போது குழந்தைகள் இருவரும் வேலனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆர்த்தி மற்றும் அவரது ஆண் நண்பரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக வெளியான செய்திக்கு தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு மறுப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகளின் தாய் அவர்களை அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறு என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications