இட ஒதுக்கீடு: ஜெயலலிதா அரசை கண்டித்து 21ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்- கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை-அண்ணா சாலையில் திமுக ஆட்சியில் ஓமந்தூரார் பெயரில் வளாகம் அமைத்து, சட்டப்பேரவைக்காகவும், தலைமைச் செயலகத்துக்காகவும் கட்டப்பட்ட கட்டிடத்தின் நோக்கத்தையும், பெயரையும் மாற்றி, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையினைத் தொடங்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்து, அந்த மருத்துவமனையிலே பணிபுரிவதற்காக சுமார் 100 உயர் அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஒன்று 27-12-2013 அன்று மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தினால் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
அந்த பணி நியமனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் என்றும், இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்றும் அந்த விளம்பரத்திலே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் அது பற்றி கண்டன அறிக்கைகள் விடுத்திருந்தன. சென்னை பெரியார் திடலில், கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நான் விரிவாகப் பதிலளித்திருந்தேன்.
உச்ச நீதிமன்றம் 18-7-2013 அன்று அளித்த தீர்ப்பின்படி தான் இட ஒதுக்கீட்டினைப் பின்பற்றவில்லை என்றும், தற்போதுள்ள மத்திய அரசு, இந்திய அரசமைப்பு சட்டத்தில் நிச்சயமாக உரிய திருத்தங்களைக் கொண்டு வராது என்றும் ஜெயலலிதா சொல்லியிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது 18-7-2013 அன்று தான்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானவுடன் நாடாளுமன்றத்திலே இது பற்றி மிகப் பெரிய விவாதமே (13-8-2013) அன்று நடைபெற்றிருக்கிறது. அப்போது, ‘‘மத்திய அரசின் சார்பில் உடனடியாக இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும்'' என்று சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் அவையிலே உறுதி அளித்ததோடு, ‘‘தேவைப்பட்டால் அரசியல் சட்டத்திருத்தமே கொண்டு வரப்படும்'' என்றும் கூறியிருக்கிறார்.
அப்படிக் கூறியதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவினையும் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்தார்கள். ஆனால் ஜெயலலிதா மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று குறைபட்டிருக்கிறார். மேலும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு மாறாகவே மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனுப்பிய கடிதத்தில் வருங்காலத்தில் செய்யப்படும் நியமனங்களில் இட ஒதுக்கீட்டினைப் பின்பற்ற வேண்டும் என்றே தெரிவித்திருந்தார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், மத்திய அரசின் நிறுவனங்களில், இட ஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்பட்ட நிலையில் தமிழக அரசு அதனை அமல்படுத்தாது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீதும், மத்திய அரசின் மீதும் பழி போடுவது என்பது எத்தகைய மோசடி வித்தை என்பதை இங்குள்ள தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகச் செயல்படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து, திமுக மாணவர் அணி சார்பில், ஜனவரி-21 அன்று மாநில மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தென்சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ., மாணவர் அணியின் துணைச்செயலாளர்கள் தம்பிகள் கோவி.செழியன், எம்.எல்.ஏ., குத்தாலம் க.அன்பழகன், கோவை கணேஷ்குமார், பூவை சி. ஜெரால்டு, மதுரை க.மகிழன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் மாணவர் அணியும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்கங்களின் மூலாதாரக் கொள்கை என்பதை மனதிலே கொண்டு 21-ந் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக ஆக்கிட வேண்டும். இந்த ஆட்சியினர் இனியாவது மனம் திருந்தி அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் தேர்வில், இட ஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்ய முன்வருவார்கள் என்று எதிர் பார்க்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications