வெடிக்கும் கலகக் குரல்.... என்னம்மா இப்படி பண்றீங்களே.... காங்கிரஸை பார்த்து புலம்பும் திமுக
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் உட்கட்சி பூசல் கடுமையாக விஸ்வரூபமெடுத்து வருகிறது. இதனால் கூட்டணிக் கட்சியான திமுக கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்; ராகுலை முதல்வராக்குவோம் என்றெல்லாம் சொல்லி வந்தார் தமிழக தலைவர் இளங்கோவன். திமுகவோ, பாஜகவுடன் கூட்டணி சேரப் போகிறது என யூகங்கள் கிளம்பின.
இந்த களேபரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸில் வெடிக்க காத்திருந்த கோஷ்டி பூசல்கள் சற்றே அடங்கின. பின்னர் காங்கிரசில் நேர்காணல்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது உட்கட்சி மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.

இளங்கோவன் மீது புகார்
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவனைப் பொறுத்தவரையில் தம்முடைய ஆதரவாளர்களுக்கே பெரும்பான்மையான தொகுதிகளை பெற்றுத் தருவது என முடிவு செய்து காய்நகர்த்திவிட்டார் என நம்புகிறது அவருக்கு எதிராக ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட கோஷ்டி. இது குறித்து காங்கிரஸ் மேலிடத்திலும் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அசால்ட் இளங்கோவன்
ஆனால் "மேலிட செல்வாக்கால்" இளங்கோவன் தான் விரும்பியபடி பயணித்து வருகிறார். இது அவரது எதிர்ப்பாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது என்பதைவிட கூட்டணிக் கட்சியான திமுகவை கதிகலங்க வைத்திருக்கிறது. இது குறித்து திமுகவும் காங்கிரஸ் மேலிடப் பார்வைக்கு கொண்டு சென்றிருக்கிறதாம்.

வார்னிங் கொடுத்த ப.சி.
இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தை அழைத்து பேசியிருக்கிறது காங்கிரஸ் மேலிடம். அங்கேயும் இளங்கோவன் மீதான புகார் பட்டியலை வாசித்துவிட்டு அவரது தன்னிச்சையான போக்குக்கு முடிவு கட்டுங்கள்... இல்லையென்றால் நடப்பது நடக்கும் என எச்சரிக்கப்பட்டதாம்.

கலகக் குரல்
இந்த சூட்டோடு சென்னையில் இளங்கோவன் எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தவும் முடிவு செய்திருந்தனர். இதனால் ப.சிதம்பரம் மீண்டும் தன்னுடைய காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை உயிர்ப்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து மீண்டும் சிதம்பரத்தை தொடர்பு கொண்ட காங்கிரஸ் மேலிடம் 'கொஞ்சம் அமைதியாக' இருக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறதாம்.

கச்சேரி காத்திருக்கு...
இதனை ஏற்று ஆலோசனை நடத்தும் முடிவை தற்காலிகமாக கைவிட்டிருக்கிறார்களாம் இளங்கோவன் எதிர்ப்பாளர்கள். சட்டசபை தேர்தலில் தங்களது ஆதரவாளர்களுக்கும் கணிசமான தொகுதிகள் கிடைக்காமல் போனால் அப்புறம் இருக்கு "கச்சேரி" என இளங்கோவன் எதிர்கோஷ்டி பொங்குகிறது....
அதே நேரத்தில் அரும்பாடுபட்டு கூட்டணி அமைக்க போய் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" என காங்கிரஸைப் பார்த்து புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது திமுக.












Click it and Unblock the Notifications