ஹர்டிக், ஜிக்னேஷ் அதிரடி.. இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை குஜராத் முடிவு பிரதிபலிக்கிறதா?
நாட்டின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் இதைத் தான் குஜராத் தேர்தலும் பிரதிபலிப்பதாகவே தெரிகிறது.
Recommended Video

சென்னை : இளைஞர்களை கையில் தான் மாற்றம் என்ற சக்தி உள்ளது இதைத் தான் குஜராத் தேர்தல் முடிவுகளும் பிரதிபலிக்கின்றன. எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் தனித்து போட்டியிட்ட தலித் உரிமைகள் போராளி ஜிக்னேஷ் மேவானியின் உறுதியும் இதைத் தான் கூறுகிறது.
குஜராத் சட்டசபை தேர்தலில் இந்த முறை பாஜக காங்கிரஸ் இடையேயான போட்டி ஒருபுறம் மற்றொரு புறம் புதுவரவு இளைஞர்களின் அரசியல் வரவு என்று அமர்க்களப்பட்டது. இளைஞர்களை முன் எடுத்தே காங்கிரஸ் கட்சியும் பிரச்சாரம் செய்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இது ஓரளவு கைகொடுத்திருக்கிறது.

பாஜகவிற்கு எதிரான அலை மற்றும் இளைஞர்களின் வாக்குகள் என்று காங்கிரஸ் கட்சிக்கு 32 ஆண்டு வரலாறு காணாத முன்னணி நிலவத்தை 2017 சட்டசபை தேர்தல் தந்துள்ளது. இதே போன்று இந்த தேர்தலில் சூறாவளியாக களமிறங்கிய இளைஞர்களும் வாக்குப்பதிவில் நல்ல வித்தியாசத்தை பெற்றுள்ளனர்.
தலித் உரிமைகளுக்கான போராளியாக அடையாளம் காணப்பட்ட வழக்கறிஞரும் இளைஞருமான ஜிக்னேஷ் மேலானி, வட்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார். தலித் பிரச்னைகளை முன் நிறுத்தி அதற்கான தீர்வு காணும் தலைவராக அறியப்பட்ட ஜிக்னேஷ் 18 ஆயிரத்து 150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் கண்டுள்ளார்.
ரிசர்வ்ட் தொகுதிகள் ஒன்றில் கூட பாஜக வெற்றி பெற முடியாது என்று களமிறங்கிய ஜிக்னேஷ் தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது, குஜராத் அரசியலில் திருப்புமுறையாக பார்க்கப்படுகிறது. இதே போன்று பிற்படுத்தப்பட்ட சமூகமான சத்ரிய தாகுர் சமூகத்தைச் சேர்ந்த அல்பேஷ் தாகூர் காங்கிரஸ் சார்பில் ரதன்புர் தொகுதியில் போட்டியிட்டார். இவரும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் களம் புகுந்த உடனே அதிரடி செய்யும் இளைஞர் படையின் அவசியத்தை குஜராத் தேர்தல் உணர்த்தியுள்ளது. குஜராத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா மாநிலங்களிலும் கூட இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும். அப்போது தான் ஆண்டாண்டாக ஆண்ட கட்சி என்று பெருமை பேசி அரைத்த மாவையே அரைக்கும் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் காண முடியும்.












Click it and Unblock the Notifications