ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்... வசமாக மாட்டும் தினகரன், அனுராதா!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினகரனிடமும், அவரது மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினகரனிடமும், அவரது மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு காலியாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுகவின் இரு அணிகளைச் சேர்ந்த தினகரனும், மதுசூதனனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
மேலும் திமுக, தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், சுயேட்சைகளும் போட்டியிட்டன. வேட்புமனு தாக்கல், அனல் தெறிக்கும் பிரசாரங்கள் என ஆர்.கே. நகரே அதகளப்பட்டது.

டிடிவி தினகரனின் பகல் கனவு
இந்நிலையில் எடப்பாடி சீட்டை பிடிக்க தனக்கு விருப்பமில்லை என்று தினகரன் கூறிவந்தார். ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி எம்எல்ஏ ஆகிவிட்டால் தமது அடிமைகள் யாரேனும் எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும்... என்று தொடர்ந்து கூவி நிர்பந்தித்தால் அவர் ராஜினாமா செய்த பிறகு டிடிவி தினகரன் எனும் நான் என்ற முழக்கத்தோடு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து பச்சை மையில் கோப்புகளில் கையெழுத்திடலாம் என்று கனவு கண்டார் டிடிவி தினகரன்.

புகுந்து விளையாட்டு
இதனால் அண்டைய மாநிலங்களே காறி துப்பும் அளவுக்கு அவ்வப்போது தொப்பி அணிந்த தொண்டர்கள் பணப்பட்டுவாடா செய்ததால் எங்கும் இல்லாத அளவுக்கு அதுவும் இடைதேர்தலுக்கு மைக்ரோ அப்சர்வர்களை தேர்தல் ஆணையம் நியமித்தது. எனினும் அடங்காத தினகரன், நூதன வழிகளில் பணத்தை பட்டுவாடா செய்தார். மேலும் பல்வேறு அமைச்சர்களுக்கு பணத்தை பிரித்து கொடுத்து அவர்களையும் வழங்க செய்தார்.

வருமான வரித் துறை ரெய்டு
இந்நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது விஜயபாஸ்கரின் வீட்டில் ரூ.89 கோடிக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மூவருக்கும் சம்மன் அனுப்பிய அதிகாரிகள் விசாரணை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர். இதனால் தேர்தல் ரத்து ஆனது.

விஜயபாஸ்கரின் மனைவியிடம்...
இந்நிலையில் நடிகர் சரத்குமாரிடம் விசாரணை நடத்திய நிலையில் அவரது மனைவி ராதிகாவுக்குச் சொந்தமான ராடன் மீடியா ஒர்க்ஸிலும் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் நீண்ட நாள்கள் கழித்து இந்த பணப்பட்டுவாடா விவகாரத்தை ஐடி தோண்டி எடுத்துள்ளது. அதாவது ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்தும் வீட்டிலிருந்து ரூ.89 கோடி மீட்கப்பட்டது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் விசாரணை நடத்த இன்று மாலை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அம்பை எய்த வில்
பணப்பட்டுவாடா தொடர்பாக விஜயபாஸ்கரின் மனைவியிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியுள்ளது வருமான வரித் துறை அதிகாரிகள். இடைத் தேர்தலின் முக்கிய கதாநாயகனும், வேட்பாளருமான தினகரனிடம் இதுவரை விசாரணை நடத்தாதது ஏன்? ரம்யாவிடம் விசாரிக்கும் போது அனுராதாவிடமும் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications