மழை நின்றும் வடியாத வெள்ளம்... குண்டும் குழியுமான சென்னை சாலைகள்: மக்கள் அவதி
சென்னை: சென்னையில் தொடர் மழையால் சாலைகள் குண்டும், குழியுமாகி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் ஒருவாரமாக வடியாமல் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது.
வடசென்னை பகுதிகள் மட்டுமல்லாது புழுதிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகள் மழை நீரில் தத்தளிக்கின்றன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் எழுந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரகாலமாக கொட்டித் தீர்த்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலை, பட்டாளம் ஸ்ட்ரான்ஸ் சாலை, கெல்லீஸ் சாலை, அண்ணாநகர் சிந்தாமணி சாலை, மாதவரம் சாலை, கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை, தரமணி சர்வீஸ் சாலை உள்பட பல இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது.

கழிவுநீரும் தேங்கியது
வேளச்சேரி தாசில்தார் அலுவலகத்தை சுற்றிலும் மழைநீர் குளம்போல் சூழ்ந்துள்ளது. வேளச்சேரி ராம் நகரில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்கியுள்ளது. பெரும்பாலான வீட்டுக்குள்ளேயும் மழைநீர் புகுந்துள்ளது.

நோய் தொற்று அபாயம்
இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. விருகம்பாக்கம் லோகையா தெருவை சுற்றிலும் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி உள்ளது.

ஸ்டாலின் ஆய்வு
திமுக பொருளாளரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் பலர் தங்களில் நிலை குறித்து ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

குண்டும் குழியுமாக
புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலை, தரமணி வி.வி.கோவில் சாலை, வேளச்சேரி பிரதான சாலை, மூலக்கடை நெடுஞ்சாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை உள்பட பல சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

தலை காட்டிய வெயில்
சென்னையில் நேற்று காலை மழை சற்று ஓய்ந்து, வெயில் தலைகாட்ட தொடங்கியது. இதையடுத்து நகரின் பெரும்பாலான இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் மெல்ல, மெல்ல வடியத் தொடங்கியது. அதேசமயம், வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், மகாகவி பாரதி நகர் மற்றும் வெஸ்ட் அவென்யூ ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. இதனால் குடியிறுப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

மேயர், அமைச்சர்கள் ஆய்வு
இதனிடையே தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை நேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழை நீர் தேங்கியிருந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பம்பு செட்டுகள் மூலமும், நீர் உறிஞ்சும் லாரிகள் மூலமும் தண்ணீரை உடனடியாக அகற்றுமாறும், வருங்காலங்களில் இந்த இடங்களில் தண்ணீர் தேங்காத அளவிற்கு நிரந்தர தீர்வு எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

சுரங்கப்பாதையில் நீர்
இதனைத் தொடர்ந்து எருக்கஞ்சேரி கழிவுநீர் அகற்று நிலையம் சரியான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். கணேசபுரம் சுரங்கப்பாதையில் சுமுக போக்குவரத்திற்காக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

மழை நீர் அகற்றம்
இதேபோன்று தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் தேங்கியிருந்த மழை நீரினை பணியாளர்கள் பம்பு செட்டுகள் மூலம் அகற்றவும், மழைநீர் வடிகால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றுவதற்கான பணிகளையும் மேற்கொண்டனர். இந்த பணிகளை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஏரிகளின் நீர்மட்டம்
பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் மொத்தம் 498 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்துள்ளது.

நிரம்பிய கொரட்டூர் ஏரி
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலைக்கு நடுவே மரப்பலகை வைத்து வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். மழை நீர் அகற்றப்படாமல் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகமாகி உள்ளதாகவும், இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications