விஷ ஊசி போட்ட நிலையில் டாக்டர், மகள் சடலம் காருக்குள் கண்டெடுப்பு! திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற மருத்துவரும், அவரது வழக்கறிஞர் மகளும் கார் ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல்லில் உள்ள நந்தவனபட்டியை சேர்ந்தவர் சோமசுந்தரம்(60). வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி உமாதங்கம்(57). அவர்களுக்கு இரண்டு மகள்கள்.

மூத்த மகள் திருமணமாகி கோவையில் கணவருடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் வானதி(25) வழக்கறிஞராக இருந்தார். அவருக்கும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். இதையடுத்து வானதி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தந்தையும், மகளும் காரில் வெளியே கிளம்பியுள்ளனர். வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.
இரவு நேரத்தில் ஆர்.எம்.காலனி 4 ரோடு சந்திப்பில் கார் ஒன்று அனாதையாக நிற்பதை பார்த்த பொதுமக்கள் அதன் அருகில் சென்று பார்த்தபோது வாகனத்திற்குள் ஒரு முதியவரும், இளம்பெண்ணும் மயங்கிக் கிடந்ததை பார்த்து உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் இருவரின் கையிலும் மருந்து ஏற்றும் ஊசி இருந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் அவர்கள் இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
தந்தையும், மகளும் குடும்ப பிரச்சனையால் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications