ஒரு ஓட்டு ஒட்டுமொத்த இமேஜையும் சரித்துவிட்டது... மனம்நொந்து வருந்திய எஸ்.ஆர்.பி.
சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பாரம்பரிய காங்கிரஸ் பின்னணியை கொண்ட அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் அரசியலில் மிகவும் சீனியரான அவர், இதுவரை தாம் கட்டிக்காப்பாற்றி வந்த இமேஜும், கொள்கையும் குடியுரிமை சட்ட விவகாரத்தில் உடைந்ததால் அதுபற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்
கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தமிழக அரசியலில் பல வருடங்களாக கோலோச்சிவருகிறார். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

எஸ்.ஆர்.பி.கொள்கை
மதச்சார்பின்மை கொள்கை உடைய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பல நேரங்களில் பாஜகவுக்கு எதிராக உரக்க குரல் கொடுத்துள்ளார். ஆனால், இந்தக்கதையெல்லாம் அவர் காங்கிரஸில் இருந்தவரை மட்டுமே. அதிமுகவுக்கு வந்தது முதல் அவர் எந்த ஒரு விவகாரத்திலும் தனது கருத்தை பதிவு செய்ததில்லை. எம்.பி.பதவிக்காக அவர் கொள்கைகளை சமரசம் செய்துகொண்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது.

அதிமுக குரல்
மத்திய அமைச்சராக பதவி வகித்த எஸ்.ஆர்.பி. ராஜ்யசபாவிலும் அதிகம் உரையாற்றியதில்லை. காரணம் அவருக்கு விருப்பமில்லையா அல்லது கட்சித் தலைமை வாய்ப்புத்தரவில்லையா எனத் தெரியவில்லை. ஆனால், அதேவேளையில் நவநீதகிருஷ்ணநும், விஜிலா சத்யானந்த் மட்டும் அவ்வப்போது ராஜ்யசபாவில் அதிமுகவின் குரலாக ஒலிப்பார்கள். சீனியரான தன்னை ஜெயலலிதா அழைத்து பதவி கொடுத்துச் சென்றார், ஆனால் இப்போது இருக்கும் தலைமையோ தன்னை ஓரங்கட்டிவிட்டது என ஏற்கனவே வருத்தத்தில் தான் இருந்துள்ளார் எஸ்.ஆர்.பி.

ஓட்டு
இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவளிக்க எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு துளியும் விருப்பமில்லையாம். வேறுவழியின்றி எங்கெங்கிருந்தோ வந்த நிர்பந்தம் காரணமாக அந்த மசோதாவை ஆதரித்தாராம். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, தலைமைச் செயலக துணை செயலாளர் ஒருவர் கூறியதால் அந்த மசோதாவை ஆதரித்தேன் எனக் கூற அது இன்னும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை
எஸ்.ஆர்.பி. கூறும் கருத்து கேலிக்குரியது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ள நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜுவோ பாலசுப்பிரமணியனிடம் அதுபற்றி விளக்கம் கேட்கப்படும் எனப் பேட்டியளித்தார். இது எஸ்.ஆர்.பி.யை கொந்தளிக்க வைத்துவிட்டது. யார் யாரை விளக்கம் கேட்பது, நான் எவ்வளவு பெரிய சீனியர், என்னை இப்படி அசிங்கப்படுத்துவதை ஓ.பி.எஸ். வேடிக்கை பார்க்கிறார் என தனது சகாக்களிடம் மிகவும் வருந்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications