எஸ்.வி.சேகரின் ஆசையைப் பாருங்களேன்!
சென்னை: நடிகர் ரஜினி காந்த் முதல்வராக வேண்டுமாம். கமல்ஹாசன் துணை முதல்வராக வேண்டுமாம். இது நாம் சொல்லவில்லை. காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளதுதான் இது.
தமிழகத்தில் இப்போது நடிகர்களின் காலமாகி விட்டது. ரஜினி ஆரம்பித்து இப்போது கமலில் வந்து நிற்கிறது. வேறு சில நடிகர்களும் கூட அவ்வப்போது கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் காமெடி நடிகர் எஸ்.வி.சேகரும் சமீப காலமாக ரஜினி, கமலை வைத்து அரசியல் பேசி வருகிறார். கூடவே விஜய், அஜீத்தையும் சேர்த்து கலக்கி கருத்துக்களைப் பகிர்ந்து கொடுத்து வருகிறார்.

ரஜினி முதல்வராம்
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு நாளிதழ் பேட்டியில்,. ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும். தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். அதன் பிறகு அவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும்.

கமல் துணை முதல்வராம்
அவருடன் கமல்ஹாசனும் அரசியலில் ஈடுபட வேண்டும். அவர் துணை முதல்வராக இருக்கலாம். சினிமா நடிகர்களாலும் திறம்பட ஆட்சியைத் தர முடியும் என்று அவர்கள் நிரூபிக்க வேண்டும். கொள்கைகளைச் சொல்லி ஆட்சி நடத்த வேண்டும்.

விஜய், அஜீத்தும் இருக்கலாமே
கூடவே அஜீத், விஜய் போன்றோரையும் கூட சேர்த்துக் கொள்ளலாம். யார் அரசியலுக்கு வர வேண்டும், வரக் கூடாது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க முடியுமே தவிர, அமைச்சர்களோ, மாவட்டச் செயலாளர்களோ முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.

நாடகக் கம்பெனி மாதிரி
தமிழக அரசியல் கிட்டத்தட்ட நாடகக் கம்பெனி மாதிரி ஆகி வருகிறது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் சுகவீனம் ஆகியவை தமிழகத்தை உலுக்கியதை விட பலரின் கருத்துக்கள்தான் இப்போது கலகலக்க வைத்து வருகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.












Click it and Unblock the Notifications