ஆளுநர் முன்பு இப்போது இரண்டே ஆப்ஷன்தான்.. என்ன செய்யப் போகிறார் ராவ்?
ஓ.பி.எஸ், சசிகலா விவகாரத்தில் தமிழக ஆளுநர் முன்பு தற்போது இரண்டே ஆப்ஷன்கள்தான் உள்ளன.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் முன்பு தற்போது 2 வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் அல்லது ஓ.பன்னீர் செல்வத்தை சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும்.
சட்டரீதியாக ஆளுநருக்கு தற்போது பெரிய அளவில் குழப்பம் எல்லாம் இல்லை. இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. அதேசமயம், அவற்றில் பெரிய குழப்பம் இருப்பதாக தெரியவில்லை. எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை அவர் பின்பற்றினாலே போதுமானது.
ஆனால் பாஜக தலையிட்டு குழப்பிக் கொண்டிருப்பதாகவே அனைவரும் கருதுகிறார்கள். இதனால்தான் ஆளுநர் தனது ஒவ்வொரு முடிவையும் தாமதப்படுத்துவதாகவும் கருத்து உள்ளது.

ஓ.பி.எஸ். - சசிகலா சந்திப்பு
முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவும் நேற்று பொறுப்பு ஆளுநர் ராவை சந்தித்து தத்தமது கோரிக்கைகளை கொடுத்து விட்டனர். ஆளுநரும் அவற்றைப் பெற்றுக் கொண்டார். மத்திய அரசுக்கும் இதுதொடர்பாக அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அதேபோல சட்ட ஆலோசனைகளையும் அவர் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்னென்ன வாய்ப்புகள்
தற்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால முதல்வராகவே இருக்கிறார். அதேசமயம், அவர் தனது ராஜினாமாவை திரும்பப் பெற அனுமதி கேட்டுள்ளார். சட்டப்படி அதற்கு வாய்ப்பு இல்லை. மறுபக்கம் சசிகலா, போதிய எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருப்பதாக கூறுகிறார். சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

பொம்மை வழக்கு சொல்வது என்ன?
இந்த இடத்தில்தான் பொம்மை வழக்கு தீர்ப்பு வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பைத்தான் ஆளுநரும் முக்கியமாக கருத்தில் கொண்டாக வேண்டியுள்ளது. பொம்மை வழக்கு தீர்ப்பின் முக்கிய சாராம்சம் என்னவென்றால், பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிப்பவர்தான் ஆட்சியமைக்க முடியும் அல்லது ஆட்சியில் தொடர முடியும் என்பதே.

ஆளுநருக்கு 2 சாய்ஸ்
இந்த நிலையில் ஆளுநருக்கு தற்போது 2 சாய்ஸ் உள்ளது. ஒன்று சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து அவருக்கு சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடுவது. 2வது, ஓ.பன்னீர் செல்வத்தை முதலில் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடுவது.

மரபு என்னவென்றால்
இதில் ஒன்றைத்தான் அல்லது தேவைப்பட்டால் அடுத்தடுத்து இரண்டையும் செய்ய வேண்டிய நிலையில் ஆளுநர் இருக்கிறார். அதேசமயம், நாடாளுமன்ற மரபுப்படி பார்ப்பதாக இருந்தால், சட்டசபை கட்சித் தலைவர் யாரோ அவரைத்தான் முதல்வராக அழைக்க முடியும். அதேசமயம், யார் நிலையான ஆட்சி தர முடியும் என்று ஆளுநர் கருதுகிறாரோ அவரை ஆட்சியமைக்க அல்லது ஆட்சியில் தொடர அவர் அனுமதிக் முடியும். இந்த சாய்ஸைத்தான் ஓ.பி.எஸ்ஸும் மலை போல நம்பி காத்திருக்கிறார்.

டிஸ்மிஸ் செ்யவது எளிதல்ல
மேலும் ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதும் தற்போது எளிதான காரியமல்ல. நினைத்த நேரத்தில் டிஸ்மிஸ் செய்து விட முடியாது. அதற்கும் பொம்மை வழக்கின் தீர்ப்பு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. ஆயிரத்தெட்டு முறை யோசித்தாக வேண்டும் டிஸ்மிஸ் செய்வதற்கு முன்பு. எனவே ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போகிறார்.. இதில் பாஜக தலையீடும், ஆதிக்கமும் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications