மாணவர்கள் யுக புரட்சிக்கு இழுக்கு.. ஜல்லிக்கட்டுக்கு சசிகலா தலைமை! கொந்தளிப்பில் தமிழகம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்கள் போராடி பெற்ற ஜல்லிக்கட்டு உரிமைக்கு, உரிமை கொண்டாடுகிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சசிகலா தொடங்கி வைக்க துரித கதியில் வேலைகள் நடக்கின்றன. இது இளைஞர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொது செயலாளர் சசிகலாவை மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் ஜெ.சுந்தர்ராஜன், செயலாளர் வி.சுந்தர் ராகவன் தலைமையிலான நிர்வாகிகளும், வாடிப்பட்டி தாலுகா, பாலமேடு கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரும், அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரும் தனித் தனியே நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்தத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக (!) எடுத்ததாக சசிகலாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தலைமையேற்று தொடங்கி வைத்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இதையேற்று சசிககலா ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பன்னீர்செல்வம் வாபஸ்

பன்னீர்செல்வம் வாபஸ்

அவசர சட்டம் பிறப்பித்த கையோடு, கடந்த மாதம் 22ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் சென்றதும், ஊர் மக்கள் எதிர்ப்பால் மதுரையிலிருந்து நேரடியாக சென்னை திரும்பிவிட்ட பின்னணியில் சசிகலா என்ட்ரி முக்கியத்துவம் பெறுகிறது.

இரட்டை அதிகாரம்

இரட்டை அதிகாரம்

அதிமுகவில் உள்ள இரட்டை அதிகார மையங்களின் போட்டியால், பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே புகழ் கிடைத்துவிடக் கூடாது என்ற நோக்கம், இந்த நிகழ்வுகளின் பின்னணியில் இருப்பதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். உட்கட்சி அரசியல் எப்படியோ போகட்டும். ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெற சசிகலா காரணம் என்ற பிம்பம் கட்டமைத்து உருவாக்கப்படுவது, தமிழக மாணவர் புரட்சிக்கே ஏற்பட்ட இழுக்கு.

காதில் போட்டுக்கொள்ளவில்லை

காதில் போட்டுக்கொள்ளவில்லை

ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டுவர கோரி, வரலாறு காணாத மாணவர் புரட்சி வெடித்தபோது, அமைதியாக ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தவர் பன்னீர்செல்வம் என்றால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தவர் சசிகலா. ராயப்பேட்டை அதிமுக ஆபீசில் மக்கள் நாயகன் எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்த வேளையில்தான், மெரினாவில் மக்கள் புரட்சி பூகம்பமாய் வெடித்துக்கொண்டிருந்தது. கத்தி கூப்பிட்டால் கூட காதில் வந்து விழும் தூரத்தில் இருந்த சசிகலாவுக்கு, வங்கக் கடல் ஓசையை கூட அமுக்கி எழுந்த மக்களின் கதறல் கேட்கவில்லை.

மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம்

நாலு நாள் கத்திவிட்டு கலைந்து போய்விடுவார்கள் என்பதுதான் சசிகலாவின் யூகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மக்கள் போட்ட வியூகமோ வேறு. நாளுக்கு நாள், கடல் அலையை மிஞ்சும் வகையில் வந்தது கூட்டம். இதை பார்த்த பிறகுதான் அதிமுகவுக்குள் ஏற்பட்டது ஆட்டம்.

அவசர சட்டம்

அவசர சட்டம்

அவசர சட்டம் வேண்டும் என்பதையே, எந்த அவசரமும் காட்டாமல், பொங்கலுக்கு 3 நாட்கள் இருந்த நிலையில், ஜனவரி 11ம் தேதிதான், மோடிக்கு கடிதமாக எழுதியிருந்தார் சசிகலா. முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு இதேபோன்ற கடிதத்தை 2 நாட்கள் முன்பாக எழுதிய பிறகு வந்த ஞானோதயம் இது. இங்கும் அதிகார போட்டிதான் முன்னிலையில் இருந்ததே தவிர ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் கிடையாது.

சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு

சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு

ஜல்லிக்கட்டு சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்படும் முன்பே, "ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற உள்ள நிலையில், மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்கள் கல்வி கற்பது மற்றும் உங்களின் அன்றாடப் பணிகளை ஆற்றுவது உள்ளிட்ட பொறுப்புகளை உணர்ந்து போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று அறிக்கையில் பாடம் நடத்தினார் சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிக்கையை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்காத நெட்டிசன்களே இல்லை. சின்னம்மா, சின்னம்மா, ஓ.பி.எஸ்ச எங்கம்மா.. என்ற கோஷம்தான் மெரினாவில் வைரலானது.

திடீர் தடியடி

திடீர் தடியடி

இந்த நிலையில்தான் ஜனவரி 23ம் தேதி மெரினாவில் மாணவர்கள் மீது போலீசார் மூலம் கடும் தடியடி நடத்தப்பட்டது. தமிழகமே அல்லோகலப்பட்டது. வீதிக்கு வீதி மாணவர்களுக்கு ஆதரவாக பெண்களும் களமிறங்கினர். ரத்த ஆறே ஓடியது என்று கூட சொல்லும் அளவுக்கு, சென்னை, கோவை, அலங்காநல்லூரில் போராட்டக்காரர்கள் மண்டை உடைக்கப்பட்டது. அந்த அல்லோகல நாளில் ரஜினி, லாரன்சிடமிருந்து கூட அமைதிகாக்க கோரிக்கை வந்தது, ஆளும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்த சசிகலா அமைதியாகவே இருந்தார். ஆளும் கட்சி தலைமை என்ற வகையில் நடந்த தடியடி அடக்குமுறைக்கு சரி பாதி பங்குதாரர் ஆனார்.

சுயநலம்

சுயநலம்

ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக சட்டம் இயற்ற முடியும் என்று தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருந்தது மாநில அரசு. அறிவுரை சொல்லாமல் இருந்தது ஆளும் கட்சியின் தலைமை. மாணவர்கள் புரட்சிக்கு பிறகு ஒரே வாரத்தில் அத்தனையும் நடந்து முடிந்தது. மூன்றுவருடமாக தூங்கிய ஆளும் அரசை ஒரே வாரத்தில் தட்டி எழுப்பியது மக்களின் போர்ப் பறை. இதையும் செய்யாமல் விட்டிருந்தால் ஆட்சிக்கே ஆபத்து என்ற நிலையில்தான் அவசரமாக டெல்லி சென்று நடவடிக்கை எடுத்தார் முதல்வர். கட்சியின் அடிநாதமான பெண்களே வீதிக்கு வந்துவிட்டதால் இத்தோடு கட்சியின் காலம் முடிந்துவிடுமோ என்ற பதற்றத்தில் ஒத்துழைத்தார் சசிகலா.

மக்கள் கோபம்

மக்கள் கோபம்

இப்படி ஆட்சியாளர்களிடம் நடந்த மாற்றங்கள் அனைத்துமே சுய லாபத்தின் கணக்கு. மாணவர்கள் போராட்டம் மட்டுமில்லை என்றால், ஜல்லிக்கட்டு கனவாக கலைந்திருக்கும். பனி, மழை, வெயில் என மூவகை சீதோசணத்திலும் ஒரு அடி கூட நகராமல் அறச் சீற்றம் காட்டிய மக்கள், போலீசாரின் கண்ணீர் புகை குண்டுகளுக்கும் கலங்கவில்லை. தடியடி வாங்கவும் தயங்கவில்லை. இது மாணவர் புரட்சி. மாணவர்கள் வெற்றி. எல்லாம் முடிந்த பிறகு வரும் தமிழ் சினிமா போலீஸ் போல இப்போது வந்து ஜல்லிக்கட்டை சசிகலா தொடங்கி வைப்பது பக்கா அரசியல். மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம். சசிகலா நினைத்துக்கொண்டிருப்பதை போல இது அரசியல் லாபத்திற்கு பயன்படாது. மாறாக இளம் சமூகத்தின் ஒட்டுமொத்த கோபத்தையும் தன்மீது திருப்பிக்கொள்ளப்போவதுதான் நிதர்சனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+