தவறான சிகிச்சையால் சத்துணவு அமைப்பாளர் பலி: போராட்டத்தில் குதித்த உறவினர்கள்
நெல்லை: நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் சத்துணவு அமைப்பாளர் இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நெல்லை மாவடடம் சீவலப்பேரிக்கு அருகேயுள்ள ஆலந்தாவை சேர்ந்தவர் சின்னதுரை. கருங்குளம் ஊராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சாரதா. சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். இரணியா நோய் சம்பந்தமாக சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாரதா சேர்ந்தார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் நோய் குணமாகவில்லை. இதனால் சாரதாவின் உடல் நிலை கவலைக்கிடமானது. இந்த நிலையில் நேற்று மாலை சாரதா இறந்தார். தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் அவர் இறந்து விட்டதாகவும், இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சின்னதுரை உறவினர்கள் நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் சாரதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சாராதவின் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து கலெக்டரிடம் சின்னதுரை அளித்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
எனது மனைவி குடல் இறக்கம் காரணமாக கடந்த மாதம் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு ரூ.60 ஆயிரம் செலவாகும் என தெரிவித்தனர். அதன் பிறகு அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து 2 நாட்களில் என் மனைவி கண் விழித்து பேசினார். இந்த நிலையில் அவர் திடீரென சுயநினைவை இழந்துவிட்டார். இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது அது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விடும் என தெரிவித்தனர். எனக்கு நம்பிக்கை இல்லாததால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொணடு வந்தேன். வழியிலேயே அவர் இறந்து விட்டார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications