சென்னை பள்ளியில் மாணவி பலாத்காரம் செய்து கொலை... பெற்றோர்கள் கொந்தளிப்பு
சென்னை: விடுதியில் தங்கியிருந்த வடமாநில பள்ளி மாணவி ஒருவர், சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்பு பெற்றோர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அருகே பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த வடமாநில மாணவி ஒருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளியில் ரத்தக் கறைகளைப் பார்த்ததாக அப்பள்ளி மாணவிகள் கூறிய தகவலால் பதட்டம் உண்டானது.

இது தொடர்பாக தகவலறிந்து மற்ற மாணவிகளின் பெற்றோர் பள்ளி முன்பு குவிந்தனர். மாணவி கொலையை போலீசாரோடு சேர்ந்து பள்ளி நிர்வாகம் புதைத்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
பள்ளி வளாகத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர் காவல் அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர்களை பள்ளி வளாகத்திற்கு உள்ளே விட போலீசார் மறுத்ததால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே பள்ளி மாணவி யாரும் மாயமாகவில்லை என்றும், மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.

சமீபத்தில் பெங்களூர் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களால், பள்ளி வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications