தமிழகத்தில் 1300 பள்ளிகளில் மின்சாரம் இல்லை!
சென்னை: தமிழகத்தில் 1300 பள்ளிகளில் மின்சார வசதியே இல்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய மனித வளத்துறை அமைச்சகம், மாவட்ட கல்வி தகவல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து கல்வி திட்டம் மற்றும் நிர்வாக தேசிய பல்கலை கழகம் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
இதில் தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 56 ஆயிரத்து 785 பள்ளிகளில் 1311 பள்ளிகளில் மின்சார வசதி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 385 பள்ளிகளில் மின்வசதி இருந்தும் போதிய பராமரிப்பின்றி மின் விசிறி, மின் விளக்குகள் இயங்க முடியாத நிலையில் இருக்கின்றன.
இந்த பள்ளிகள் பல ஊரக பகுதிகளில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மதுரை, சென்னை, கோவை ஆகிய மாநகராட்சி பகுதிகளிலும் மின்சார வசதி இல்லாத பள்ளி இயங்கி வருவது தெரிய வந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 219 பள்ளிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 112 பள்ளிகளிலும் மின்சார வசதி இல்லை.
சென்னையில் தரமணி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் இரண்டு பள்ளிகளிலும், மதுரையில் 44 பள்ளிகளிலும், வேலூரில் 111 பள்ளிகளிலும், கரூரில் 4 பள்ளிகளிலும் மின்சார வசதி இல்லை.
இது தவிர 11 ஆயிரத்து 795 பள்ளிகளில் சுற்று சுவர் இல்லை. இதில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளன. 168 பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் மரத்தடியிலும், கூடாரங்களிலும் வகுப்புகள் நடந்து வருவது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications