இது தினகரனின் வெற்றியைத் தடுக்க நடந்த சதி!- எஸ்.டி.பி.ஐ கட்சி
சென்னை: ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் நோக்கமே டிடிவி தினகரன் வெற்றியைத் தடுக்கவே என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12 அன்று இடைத்தேர்தல் நடைபெறவிருந்த சூழலில், பணப்பட்டுவாடா புகார்கள் அடிப்படையில், தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துள்ளது. இதன் பின்னணியில் பாஜகவின் மிகப்பெரும் தோல்வியை மறைக்கவும், அதிமுகவின் (அம்மா) டி.டி.வி. தினகரனின் வெற்றியை தடுக்கவும் மத்திய ஆளும் பாஜக மேற்கொண்ட சதிகள் அடங்கியுள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அந்த தொகுதி முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் மாற்றம் முதல், அந்த தொகுதிக்குட்பட்ட அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும், அரசு அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு 250 க்கும் மேற்பட்ட தேர்தல் நுண்ணறிவு பிரிவினர், கண்காணிப்பு கேமராக்கள் என ஒட்டுமொத்த தொகுதியும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற பிறகும், அங்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றால் அது தேர்தல் ஆணையத்தின் பலவீனத்தை தான் வெளிப்படுத்துகிறது.
முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் குறிப்பாக ஆளும் அதிமுகவில் நிலவிவரும் அசாதாரண சூழல், அதிமுகவின் இடட்டை இலை சின்னம் முடக்கம் முதல் வருமான வரித்துறை சோதனை, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து வரை அனைத்திலும் மத்தியில் ஆளும் பாஜகவின் தலையீடு இருப்பது, பாஜக தலைவர்கள் வெளியிட்டுவரும் அறிக்கைகள், முன்னறிவிப்புகள் மற்றும் நடைபெறும் நிகழ்வுகள் மூலம் அறிய முடியும். இதற்கு காரணம் அதிமுக கட்சியை முற்றிலும் அழிக்க திட்டமிடும் பாஜகவின் சதிவேலைகள் தான் என்பதை மறுப்பதற்கில்லை.
தேர்தல் ஆணையத்தின் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், தன்னிச்சையான சுயாட்சி கொண்ட தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அனைத்தும், பாஜக தலைவர்களின் முன்னறிவிப்பு அறிக்கைகளை ஒத்திருப்பது தமிழக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் பல்வேறு கட்சிகளின் மீதும் எழுந்தன. வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், புகாருக்கு ஆளான அதிமுக (அம்மா) டி.டி.வி. தினகரனை மட்டும் குறிவைத்து வருமானவரி சோதனைகள் ஏன் நடத்தப்பட்டன? சோதனைகளின் போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், வருமான வரித்துறையினர் எடுத்த ஆவணமாக கூறப்படும் பணப்பட்டுவாடா ஆவணங்கள் மட்டும் ஊடகங்களில் உலா வந்தது எப்படி? இதன்மூலம் டி.டி.வி. தினகரன் மற்றும் அந்த அணிக்கு எதிராக மக்கள் மத்தியில் இழிவை, அவப்பெயரை உண்டாக்க வேண்டும். அதன்மூலம் மேலும் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்ற மத்தியில் ஆளும் பாஜகவின் சதி வெளிப்படுகிறது.
இதற்கு முன்னர் அதிகளவிலான பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டு, பின்னர் வேறு ஒரு தேதியில் மீண்டும் அங்கு தேர்தல் நடைபெற்றது. மீண்டும் தேர்தல் நடைபெற்ற போது அங்கு பணப்பட்டுவாடா நடைபெறவில்லை என்பதை தேர்தல் ஆணையத்தால் உறுதியிட்டு சொல்லமுடியுமா?
ஜனநாயக கடமைகளில் முக்கியமான தேர்தலில், பணப்பட்டுவாடாவை எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால், தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஆரம்பம் முதலே, முறையான கண்காணிப்புகளை மேற்கொள்ளாமல், கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்யும் தேர்தல் ஆணையத்தின் பலவீனமான நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி அங்கீகரிக்கவில்லை. அதோடு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற சுதந்திரமான தேர்தல் ஆணையம், மத்தியில் ஆளுகின்ற கட்சியின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படுவதை எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தி, நேர்மையான தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தான் பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்தனவே தவிர, தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரவில்லை. ஆனால், பாஜக மட்டுமே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு, தேர்தல் ரத்து செய்யப்படும் என்று முன்னறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி தேர்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படியாக ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பு முதல், இரட்டை இலை சின்னம் முடக்கம், தேர்தல் ரத்துவரை பாஜக தலைவர்களின் அறிக்கை படியே அனைத்தும் நடைபெற்று வருகின்றன. எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தின் பின்னணியில் பாஜக, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் கூட்டு நடவடிக்கை தான் என்பது தெளிவாகிறது.
ஆர்.கே.நகர். தேர்தல் ரத்தை தொடர்ந்து, அடுத்த தேர்தல் அறிவிப்பு வருவதற்குள், அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தி, தனது கைப்பாவை அணியின் மூலம் தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாஜக திட்டமிட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவின் சதித்திட்டம் வெறும் அதிமுகவுக்கு எதிரானது மட்டுமல்ல. அது மற்ற அனைத்து ஜனநாயக கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகும். ஆகவே, அனைத்து ஜனநாயக சக்திகளும், அதிமுக தொண்டர்களும் பாஜகவின் சதியை புரிந்துகொண்டு, அதனை முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications