ஜெயலலிதா பிரதமர் ஆக வேண்டும் என்று கூறுவது வெட்கக்கேடானது: ஸ்டாலின்
சென்னை: தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் யார் யாரோ பிரதமர் ஆக வேண்டும் என கூறுகிறார்கள். அதில் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள அம்மையாரும் பிரதமர் ஆக வேண்டும் என கூறுவது தான் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் பகுதி 27வது வட்ட கழக செயலாளர் ஜீ.எம்.தேவன் இல்ல திருமணத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவுக்கு தலைமையேற்று மணமக்கள் டி.ஸ்ரீகாந்த்- ஜீ.எம்.டி.மஞ்சுமேகலை ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின் பேசியதாவது,

இந்த மணவிழாவில் பங்கேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நடக்கவிருக்கும் திருச்சி மாநில மாநாட்டில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என முரசொலியில் தலைவர் தினமும் "உடன்பிறப்பே" என்ற தலைப்பில் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். அதில், முன் நடந்த மாநாட்டு வரலாற்று செய்திகளையும் எழுதி வருகிறார். ஆகவே, அதுபோல நடக்கவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ள இந்த மணவிழா நிகழ்ச்சியில் உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் யார் யாரோ பிரதமர் ஆக வேண்டும் என கூறுகிறார்கள். அதில் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள அம்மையாரும் பிரதமர் ஆக வேண்டும் என கூறுவது தான். ஏற்கனவே தமிழ்நாடு இருண்ட மாநிலமாக இருந்து வருகிறது. இப்போது இந்தியாவையும் இருண்ட தேசமாக்க அவர் எண்ணுகிறார்.
ஆகையால் மக்கள் அனைவரும் நாட்டை பற்றி சிந்தித்து நாடு வளம் பெற திராவிட முன்னேற்ற கழகத்தை மிகப் பெரியதொரு அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும் என உங்களை இந்த மணநிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன். இங்குள்ள அனைவரும் மாநாட்டில் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும், இந்த தம்பதியினரும் கண்டிப்பாக கலந்து கொண்டு தங்களின் தேனிலவை திருச்சியில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொண்டு மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தி விடை பெறுகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications
